திருவாரூர் கடைவீதியில் போக்குவரத்து நெரிசல்: கொரோனா தொற்று பரவும் அபாயம் பொதுமக்கள் அச்சம்


திருவாரூர் கடைவீதியில் போக்குவரத்து நெரிசல்:  கொரோனா தொற்று பரவும் அபாயம் பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 30 July 2020 11:28 AM IST (Updated: 30 July 2020 11:28 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் கடைவீதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருவாரூர், 

திருவாரூர் நகரில் தேரோடும் 4 வீதிகளை தவிர அனைத்து சாலைகளும் மிக குறுகலாக இருந்து வருகின்றன. இதில் காய்கறி, மளிகை, துணிக்கடை, நகைக்கடை என அனைத்து பொருட்களும் வாங்க கடைவீதிக்கு தான் செல்ல வேண்டும். இதனால் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள கடைவீதி எந்த நேரத்திலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

கடைவீதியில் எந்த நேரமும் கனரக வாகனம் செல்வதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. குறிப்பாக ஊரடங்கு அறிவிக்கும் ஞாயிற்றுக்கிழமை முதல் நாளில் மக்கள் கூட்டம் கடைவீதியில் அலைமோதுகிறது. இதில் கடைகள் விரிவாக்கம், நடைபாதை கடைகள் போன்றவற்றால் வாகனம் நிறுத்துவதற்கு இடவசதி இல்லாமல் உள்ளது.

கொரோனா தொற்று பரவும் அபாயம்

திருவாரூரில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசம் அணியவும் அரசின் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. மேலும் வழிபாட்டு தலங்கள் போன்ற மக்கள் கூடுகின்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு தடை விதித்துள்ளது. இந்தநிலையில் திருவாரூர் கடைவீதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே கடைவீதியில் ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம் அகற்றிட வேண்டும். போக்குவரத்தினை சீரமைத்திட போலீசாரை நியமிக்க வேண்டும். வாகனம் நிறுத்த இடவசதி ஏற்படுத்த வேண்டும். சாலைகளின் நடுவே தடுப்பு அமைக்க வேண்டும். கனரக வாகனங்கள் கடைவீதிக்குள் வருவதற்கு உரிய கால நேரத்தை கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் போக்குவரத்து நெரிசலில் கட்டுபடுத்துடன், கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story