ஊரடங்கு விதியை மீறி வாடிக்கையாளர்களை திரட்டி கூட்டம்; தனியார் நிறுவனத்துக்கு ‘சீல்’ வைப்பு கலெக்டர் எஸ்.சிவராசு நடவடிக்கை
ஊரடங்கு விதியை மீறி வாடிக்கையாளர்களை திரட்டி கூட்டம் நடத்திய தனியார் நிறுவனத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
திருச்சி,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அனுமதியின்றி கூட்டங்கள், போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருச்சியில் உள்ள தனியார் முதலீட்டு நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் சுமார் 300 பேரை திரட்டி நேற்று காலை கூட்டம் நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில், திருச்சி கிழக்கு தாசில்தார் மோகன், பொன்மலை சரக உதவி கமிஷனர் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அந்த நிறுவனத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், ஊரடங்கை மீறி அங்கு வாடிக்கையாளர்களை அழைத்து கூட்டம் நடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை வெளியேற்றி விட்டு, அந்த நிறுவனத்தை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும், கொரோனா தொற்றை பரப்பும் வகையில் ஊரடங்கை மீறி கூட்டம் நடத்தியதாக கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story