கோடாலிக்கருப்பூர் கொள்முதல் நிலையத்தில் சாக்குகள் பற்றாக்குறை சாலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் மணிகள் மழையில் நனைந்து முளைத்தன விவசாயிகள் கவலை
கோடாலிக்கருப்பூர் கொள் முதல் நிலையத்தில் இடம், சாக்கு பற்றாக்குறையால் சாலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் மணிகள் மழையில் நனைந்து முளைத்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தா.பழூர்,
அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியான தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட கோடாலிக்கருப்பூர், அண்ணங்காரம்பேட்டை, சோழமாதேவி, குறிச்சி, இடங்கண்ணி, வாழைக்குறிச்சி, கண்டியங்கொல்லை, கோடாலி, வடவாறு தலைப்பு, தென்கட்சிபெருமாள்நத்தம், கீழக்குடிகாடு, மேலக்குடிகாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தற்போது சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது சில பகுதிகளில் நெல் அறுவடை செய்யப் பட்டும், பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்ய விவசாயிகள் தயார் நிலையிலும் உள்ளனர். விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய கோடாலிக்கருப்பூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது.
சாக்குகள் பற்றாக்குறை
இந்த கொள்முதல் நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததாலும், சாக்குகள் பற்றாக்குறையாக உள்ளதாக கூறி அதிகாரிகள் விவசாயிகளிடம் இருந்து நெல் மணிகளை முழுமையாக கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டவில்லையாம். இதனால் கொள்முதல் நிலையம் அருகே சாலை யோரங்களிலும், திறந்த வெளியிலும் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் குவியல் குவியலாக நெல் மணிகளை கொட்டி, அதன்மேலே தார்ப்பாய் போட்டு இரவு, பகலாக பாதுகாத்து வருகின்றனர். அந்த நெல் மணிகளை சாலையில் செல்லும் கால்நடைகள் மற்றும் பன்றிகள் மேய்ந்து விடுகின்றன.
மழையில் நெல் மணிகள் முளைத்தன
தற்போது கடந்த 4 நாட்களாக இந்த பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், சாலையில் பெருக்கெடுத்தும் ஓடும் மழைநீரால் கொட்டப் பட்டுள்ள நெல் மணிகள் நனைந்து, முளைக்க தொடங்கி விட்டதால் விவசாயிகள் பாதிப்புக் குள்ளாகி, மிகுந்த கவலையில் உள்ளனர். மேலும் கொள்முதல் நிலையத்திலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து தற்போது முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதனை விற்பனை செய்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் கோடாலிக்கருப்பூர் கொள்முதல் நிலையத்திற்கு போதி அளவில் மேற்கூரை வசதியுடன் இடமும், போதிய அளவில் சாக்குகளையும் அனுப்பினால் தான் நெல் கொள்முதல் செய்ய முடியும். அதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட நெல் மணிகளை அனைத்தையும் எந்த நிபந்தனையும் இன்றி, அதிகாரிகள் முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும். பாதிப்படைந்த விவசாயி களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story