சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.50 கோடி மானியம் - கலெக்டர் தகவல்
சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.50 கோடி மானியம் பெறலாம் என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. சொட்டுநீர் பாசனத்திற்கு ரூ.50 கோடியே 40 லட்சம் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் 5 ஏக்கர், மற்ற விவசாயிகள் 12½ ஏக்கர் நிலத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம்.
சிறு, குறு விவசாயி சான்றிதழ், சிட்டா, அடங்கல், ரேஷன் அட்டை நகல், ஆதார் அட்டை, நில வரைபடம் ஆகியவற்றை அந்தந்த வட்டார தோட்டக்கலை துறை அலுவலகத்தில் கொடுத்து சொட்டுநீர் பாசனம் அமைக்க பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story