மில் தொழிலில் நஷ்டம்: பிரபல கார் பந்தய வீரர் தற்கொலை


மில் தொழிலில் நஷ்டம்: பிரபல கார் பந்தய வீரர் தற்கொலை
x
தினத்தந்தி 30 July 2020 10:48 PM GMT (Updated: 30 July 2020 10:48 PM GMT)

மில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பிரபல கார் பந்தய வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கருமத்தம்பட்டி, 

கார் பந்தய வீரர் தற்கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கார் பந்தய வீரர்

கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 43). பிரபல கார் பந்தய வீரர். இவர் பல்வேறு கார் பந்தயங்களில் பங்கேற்று வெற்றி பெற்று உள்ளார். மேலும் அவர், கருமத்தம்பட்டி அருகே மில் வைத்து நடத்தி வந்தார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 4 மாதமாக விஜயகுமார் நடத்தி வந்த மில் இயங்கவில்லை. இதனால் அவருக்கு தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்தார். அதன் காரணமாக நண்பர்கள் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

தூக்கில் தொங்கினார்

சம்பவத்தன்று விஜயகுமார், தனது மில்லுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் மில்லுக்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தார். இதை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் விரைந்து சென்று விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், நடிகர் அஜீத்குமார் ஆகியோரின் நட்பு வட்டத்தில் விஜயகுமார் இருந்தாக தெரிகிறது.

Next Story