ஊட்டி தாவரவியல் பூங்காவில் திசு வளர்ப்பு முறையில் வாழை நாற்றுகள் உற்பத்தி


ஊட்டி தாவரவியல் பூங்காவில்   திசு வளர்ப்பு முறையில் வாழை நாற்றுகள் உற்பத்தி
x
தினத்தந்தி 30 July 2020 11:26 PM GMT (Updated: 30 July 2020 11:26 PM GMT)

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் திசு வளர்ப்பு முறையில் 50 ஆயிரம் வாழை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்கா உள்ளது. பூங்காவில் கடந்த 1995-ம் ஆண்டு திசு வளர்ப்பு கூடம் கட்டப்பட்டது. திசு வளர்ப்பு கூடம் சில ஆண்டுகள் செயல்பட்ட பின்னர் மூடிய நிலையில் இருந்தது. தற்போது கடந்த ஆண்டு சோதனை அடிப்படையில் வாழை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டது. ஜி-9 ரக வாழை நாற்றுகள் குறிப்பிட்ட வெப்பநிலையில் உற்பத்தி செய்யப்பட்டு, பின்னர் பசுமை குடில்களில் நடவு செய்து வளர்க்கப்படுகிறது.

அதன் வளர்ச்சிக்கு ஏற்றவாறு பயிற்சி பெற்ற பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர். சோதனை அடிப்படையில் உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுகள் கடந்த ஆண்டு தோட்டக்கலை பண்ணைகளில் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்பட்டது. தற்போது வாழைத்தார்கள் சுமார் 6 அடி உயரம் வரை வளர்ந்துள்ளன. முதலில் 3 ஆயிரம் நாற்றுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. சோதனை வெற்றி அடைந்ததால் நடப்பாண்டில் 50 ஆயிரம் வாழை நாற்றுகள் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டு மாதங்களில் நாற்றுகள் வளர்ந்த பின்னர் விற்பனைக்கு தயாராகி விடும்.

50 ஆயிரம் நாற்றுகள்

தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ஜி-9 ரக வாழை நாற்றுகளை கோவை, ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர். ஊட்டி தாவரவியல் பூங்காவில் கடந்த ஆண்டு சோதனை அடிப்படையில் வாழை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வினியோகிக்கப்பட்டது. தற்போது இந்த நாற்றுகளின் தேவை அதிகரித்து உள்ளதால் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. 50 ஆயிரம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் டான்ஹோடா மூலம் விவசாயிகள் எங்கிருந்து வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதை கருத்தில் கொண்டுதமிழ்நாடு தோட்டக்கலைத் துறை இயக்குனர் சுப்பையன் 5 லட்சம் வாழை நாற்றுகள் உற்பத்தி செய்யுமாறு தெரிவித்து உள்ளார். வாழை நாற்றுகள் தேவைப்படும் விவசாயிகள் ஒரு வாழை நாற்றுக்கு ரூ.15 செலுத்தி பெற்று கொள்ளலாம். மேலும் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. நீலகிரி மலை மாவட்டம் என்பதால் பந்தலூர், கூடலூர், பர்லியார் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் இந்த வாழை நாற்றுகள் வளரும். சமவெளிப் பகுதிகளில் நடவு செய்தால் நல்ல மகசூலை தரும் என்றார்.

Next Story