கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு கால்நடைத்துறைக்கு புதிதாக களப்பணியாளர்கள் நியமனம் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்


கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு   கால்நடைத்துறைக்கு புதிதாக களப்பணியாளர்கள் நியமனம்   அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்
x
தினத்தந்தி 31 July 2020 7:26 AM IST (Updated: 31 July 2020 7:26 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு கால்நடைத்துறைக்கு புதிதாக களப்பணியாளர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

மொடக்குறிச்சி, 

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த 51 வேலம்பாளையம் பகுதியில் புதிய கால்நடை கிளை நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு மொடக்குறிச்சி வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விழாவில் தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கால்நடை கிளை நிலையத்தை திறந்து வைத்தும், 54 பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான விலையில்லா கோழிக்குஞ்சுகளை வழங்கியும், நடமாடும் கால்நடை மருத்துவமனைகளை திறந்து வைத்தும் பேசினர்.

கால்நடை பூங்கா

இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரே நாளில் 3 கால்நடை புதிய கிளைகள் ஈரோடு மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு நாட்டு கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு ஆடுகள் வழங்கப்பட்டு உள்ளன. கால்நடைத் துறையை பொறுத்தவரை தமிழகம் சிறந்து விளங்குகிறது. இதற்கு சான்றாக சேலத்தில் அமைக்கப்பட்டு உள்ள கால்நடை பூங்கா உள்ளது.

தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் மட்டும் தான் அதிகமாக ரூ.3 கோடி மதிப்பில் நாட்டு கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட உள்ளன. கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக அம்மா ஆம்புலன்ஸ் சேவையை படிப்படியாக உயர்த்த முதல்- அமைச்சரின் அனுமதி பெறப்படும்.

களப்பணியாளர்கள்

கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு கால்நடைத்துறைக்கு தமிழகத்தில் புதிதாக களப்பணியாளர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு கால்நடை பெரு மருத்துவமனை ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டிலும், கோபி கால்நடை பெரு மருத்துவமனை ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டிலும் 24 மணி நேரம் செயல்படும் கால்நடை பன்முக மருத்துவமனையாகவும், பெத்தாம்பாளையம், கஸ்பாபேட்டை, செம்மம்பாளையம் மற்றும் முத்தையன்வலசு, பசுவப்பட்டி, நாகதேவன்பாளையம், குன்றி ஆகிய கால்நடை கிளை நிலையங்கள் கால்நடை மருந்தகங்களாகவும் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மேலும், தேவர்மலை, ஜம்பை, பருவாச்சி, பெரியகவுண்டன்வலசு, வேலம்பாளையம், ஈஞ்சம்பள்ளி ஆகிய இடங்களில் 6 புதிய கால்நடை கிளை நிலையங்கள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளதுடன், பழமங்கலம், குருவரெட்டியூர் ஆகிய 2 கால்நடை கிளை நிலையங்கள் கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நடப்பாண்டில் 16 ஆயிரத்து 650 பயனாளிகளுக்கு 4 லட்சத்து 16 ஆயிரத்து 250 நாட்டுகோழிக்குஞ்சுகள் ரூ.3 கோடியே 40 லட்சம் மதிப்பில் வழங்கப்பட உள்ளது. மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ்தீவன சாகுபடியில் 100 சதவீத மானியமாக ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் 200 ஏக்கர் விவசாய நிலப்பரப்பில் கோ 4, கோ 5 கம்பு, நேப்பியர் புல் சாகுபடிக்கு என 2 ஆயிரத்து 240 கிலோ விதைகள் 578 பேருக்கு வழங்கப்பட்டு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆலோசனை

குருவரெட்டியூர், பழமங்கலம் மற்றும் முத்தம்பாளையம் ஆகிய கால்நடை மருந்தகங்கள் தலா ரூ.34 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பெத்தாம்பாளையம், கஸ்பாபேட்டை, செம்மம்பாளையம் ஆகிய கால்நடை மருந்தகங்களுக்கு தலா ரூ.40 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில், புதிய கட்டிட கட்டுமானத்திற்கு நிலம் தேர்வு செய்யப்பட்டு கட்டிட பணிகள் மேற்கொள்ள முன்மொழிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறுகையில், ‘மத்திய அரசு புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிக்கையை பெற்று தமிழக முதல்- அமைச்சருடன் ஆலோசனை செய்து முடிவுகள் எடுக்கப்படும்,’ என்றார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு), தோப்பு வெங்கடாசலம் (பெருந்துறை), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கால்நடை பராமரிப்புதுறை மண்டல இணை இயக்குனர் குழந்தைசாமி, மொடக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் கணபதி, துணைத்தலைவர் மயில் என்கிற சுப்பிரமணி, ஊராட்சி தலைவர்கள் என்.ஆர்.நடராஜ், கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சுசீலா உள்பட அரசு துறை அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story