கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க நகரம், ஊரக பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்


கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க  நகரம், ஊரக பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 31 July 2020 7:58 AM IST (Updated: 31 July 2020 7:58 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

சிவகாசி, 

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் கொரோனாவால் 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதைதடுக்க சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

மருத்துவ முகாம்கள்

இந்தநிலையில் சிவகாசி நகராட்சி சார்பில் கடந்த 11 நாட்களாக ஒவ்வொரு பகுதியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதுவரை 20 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உரியநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

இதேபோல் நேற்று காலை பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட முத்துராமலிங்கபுரம் காலனியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் நவாஸ் கலந்து கொண்டு சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். இதில் பஞ்சாயத்து தலைவர் உசிலை செல்வம், துணைத்தலைவர் ராஜபாண்டியன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் லட்சுமண பெருமாள்சாமி செய்திருந்தார்.

கிருமி நாசினி

இதேபோல் ஆனைகுட்டம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. இதை பஞ்சாயத்து தலைவர் முத்துராஜ் தொடங்கி வைத்தார். காய்ச்சல் அறிகுறி இருந்தவர்கள் முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். அனுப்பன்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பஞ்சாயத்து தலைவர் கவிதாபாண்டியராஜ் உத்தரவின் பேரில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 54 பஞ்சாயத்துகளிலும் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றியதலைவர் முத்துலட்சுமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். காய்ச்சல் பாதிப்பு உள்ள இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்தி நோய் பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க பஞ்சாயத்து நிர்வாகங்களுக்கு அதிகாரிகள் மூலம் உத்தரவிட்டுள்ளார். உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளின் தீவிர நடவடிக்கையால் சிவகாசி பகுதியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும் என்று சமூகஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story