ராசிபுரத்தில் 30 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை அமைச்சர் சரோஜா வழங்கினார்


ராசிபுரத்தில் 30 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை அமைச்சர் சரோஜா வழங்கினார்
x
தினத்தந்தி 31 July 2020 9:44 AM IST (Updated: 31 July 2020 9:44 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரத்தில் 30 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை அமைச்சர் சரோஜா வழங்கினார்.

ராசிபுரம், 

ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ராசிபுரம் தாசில்தார் பாஸ்கரன் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் திருமுருகன், ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் ராஜா, செட்டில்மென்ட் தாசில்தார் ருக்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா கலந்து கொண்டு பேசுகையில், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமூக நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முககவசம் அணிய வேண்டும் என்றார்.

பின்னர் அமைச்சர் 30 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார். தொடர்ந்து நிலவரி கணக்கெடுப்பு திட்டத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்ட வீடுகளுக்கான பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 13 பேருக்கு பட்டா வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் பாலசுப்பிரமணியன், வீட்டு வசதி சங்கத்தலைவர் கோபால், நகர அ.தி.மு.க. மாணவர் அணி செயலாளர் ஜெகன், நகர இளைஞர் அணி செயலாளர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் சரோஜா , எம்.எல்.ஏ. அலுவலகத்தில் ராசிபுரம் தொகுதிக்குட்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அதிகாரிகள், மசக்காளிப்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவர் பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏரி குடிமராமத்து பணிகள் குறித்தும், அரசின் நலத்திட்டங்கள் உடனடியாக மக்களுக்கு சென்றடைய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

Next Story