8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் தர்மபுரி எம்.பி.யிடம் விவசாயிகள் கோரிக்கை மனு


8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் தர்மபுரி எம்.பி.யிடம் விவசாயிகள் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 31 July 2020 10:26 AM IST (Updated: 31 July 2020 10:26 AM IST)
t-max-icont-min-icon

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தர்மபுரி எம்.பி.யிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

தர்மபுரி, 

சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை என்னும் பசுமைவழி சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகளின் எதிர்பை மீறி தர்மபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்த திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி இந்த திட்டத்தை ரத்து செய்தது.

இதுதொடர்பான மேல் முறையீட்டு வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 6-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களையும், வாழ்வாதாரத்தையும் இழக்கும் அபாயம் உள்ளதால் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தகூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தொடர்போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க தலைவர் அருள் தலைமையில் விவசாயிகள் குழுவினர் தர்மபுரி எம்.பி. செந்தில்குமாரை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கிராமசபையில் தீர்மானம்

8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தியே தீருவது என்று மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அவசர மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளது. இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் இந்த திட்டத்தை ஆதரித்து பேசி வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் நிலங்கள், நீர்நிலைகள், மலைகள், காடுகளை அழிக்கும் இந்த திட்டம் இயற்கை சமன்நிலைக்கு முரணானது. மேற்கு மண்டல மாவட்டங்களை சேர்ந்த 9 எம்.பி.க்கள், 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இருப்பதற்கு நன்றி தெரிவிக்கிறோம்.

அதேபோல் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் மாவட்டங்களான தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, காஞ்சீபுரம் ஆகியவற்றை சேர்ந்த எம்.பி.க்களும் இந்த திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்றத்தில் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் எம்.பி.யின் கண்காணிப்பில் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கோரி உள்ளனர்.

Next Story