வேப்பனப்பள்ளியில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் பண மோசடி புகார் பணி பொறுப்பாளர் நீக்கத்துக்கு எதிராக ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


வேப்பனப்பள்ளியில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் பண மோசடி புகார் பணி பொறுப்பாளர் நீக்கத்துக்கு எதிராக ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 31 July 2020 10:33 AM IST (Updated: 31 July 2020 10:33 AM IST)
t-max-icont-min-icon

வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் பண மோசடி புகார் தொடர்பாக பணி தல பொறுப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக பெண்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் சென்னசந்திரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள ஊரக வேலை உறுதித்திட்ட பணிதல பொறுப்பாளராக விருப்பசந்திரம் கிராமத்தை சேர்ந்த சரோஜா என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். பின்பு இவர் கடந்த வாரம் வேலைக்கு வராத ஆட்களின் பெயர்களை சேர்த்து வேலை செய்ததாக கணக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த மோசடி குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் விசாரணை நடத்திய அவர் இந்த மோசடி தொடர்பாக சரோஜாவை பணியில் இருந்து அதிரடியாக நீக்கினார்.

முற்றுகை

இதையடுத்து நேற்று வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு, சென்னசந்திரம், வாரசந்திரம், விருப்பசந்திரம், ஆவகனப்பள்ளி, பந்தூளுர் ஆகிய 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஊரக வேலை உறுதித்திட்டத்தில் வேலை செய்யும் பெண்கள் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். இதனால் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் பெண்களிடம் விசாரணை செய்தனர்.

அப்போது அவர்கள், சரோஜாவிற்கு ஆதரவாகவும், அவரை மீண்டும் பணியில் சேர்க்குமாறும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அதிகாரிகள் சரோஜா மீதான புகார் குறித்து கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

காலிக்குடங்களுடன்...

வேப்பனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம்பூர் கிராமத்தை அருகில் உள்ள நசிம் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு கடந்த சில மாதங்களாக இந்த கிராமத்தில் குடிநீர் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் தினமும் குடிநீருக்காக விவசாய நிலங்களில் உள்ள நீர் ஆதாரத்தை தேடி அலைந்து வந்துள்ளனர். இதையடுத்து நேற்று குடிநீர் கேட்டு கிராம மக்கள் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர். உடனே அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Next Story