நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்குவது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் நடந்தது


நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்து  மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்குவது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம்  அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 31 July 2020 5:37 AM GMT (Updated: 31 July 2020 5:37 AM GMT)

நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்து, மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்குவது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம்,

நாகையில் இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரில் நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்குவது குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார். முதன்மை செயலாளர் பணீந்திரரெட்டி, எம்.பி.க்கள் செல்வராஜ், ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் மதிவாணன், பவுன்ராஜ், மயிலாடுதுறை மாவட்ட தனி அலுவலர் லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் வரவேற்றார். கருத்துக்கேட்பு கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பேசியதாவது:-

தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் கவுதமன்:- நாகை-தஞ்சை 4 வழி சாலை பணி பல ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். விழுப்புரம் தூத்துக்குடி 4 வழிச்சாலை நிலம் கையகப்படுத்தும் போது நில உரிமையாளர்களுக்கு சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.

வருவாய் கிராமங்கள்

அ.தி.மு.க. நகர செயலாளர் தங்ககதிரவன்: அக்கரைப்பேட்டை, வடக்கு பொய்கைநல்லூர் பகுதிகளை தனி வருவாய் கிராமங்களாக உருவாக்க வேண்டும். சிக்கல் பகுதியை தலைமையிடமாக கொண்டு தனி போலீஸ் நிலையம் ஏற்படுத்தி தர வேண்டும்.

தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன்:- கொள்ளிடம், செம்பனார்கோவில் பகுதிகளை தலைமையிடமாக கொண்டு தனி தாசில்தார் அலுவலகம் உருவாக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சரபோஜி:- நாகை மாவட்டத்தில் திருமருகல், தலைஞாயிறு ஆகியவற்றை தலைமையிடமாக கொண்டு 2 தாலுகாக்கள் புதிதாக உருவாக்க வேண்டும்.

தி.மு.க. கிழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன்:- வேளாங்கண்ணி கீழ்வேளூர் தாலுகாவுடன் தற்பொழுது செயல்படுகிறது. மாவட்டம் பிரித்தவுடன் வேளாங்கண்ணியை நாகை தாலுகாவுடன் இணைக்க வேண்டும். உலக புகழ்மிக்க வேளாங்கண்ணியை தலைமையிடமாக கொண்டு சட்டமன்ற தொகுதியை உருவாக்க வேண்டும்.

கல்வி மாவட்டங்கள்

காந்தி:- மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கும் பொழுது மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் நாகை வருவாய் மாவட்டத்தில் இருந்து சென்றுவிடும். எனவே மாவட்டம் பிரித்த பின்னர் நாகை வருவாய் மாவட்டத்திற்கு புதிதாக 2 கல்வி மாவட்டங்கள் உருவாக்கிட வேண்டும்.

செல்வராஜ் (நாகை எம்.பி.): நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தை பிரிப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் அந்த மாவட்டத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைந்து செய்ய வேண்டும்.

சித்திக்:- புதிதாக பிரிக்கப்படும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தேவையான அனைத்து அரசு அலுவலர்களையும் காலதாமதம் இன்றி நியமிக்க வேண்டும்.

பணீந்திரரெட்டி(அரசு முதன்மை செயலாளர்): மாவட்டம் பிரிப்பது தொடர்பான கருத்துகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் நிறைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக்கள் அனைத்தும் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். விரைவில் மாவட்டம் பிரிக்கப்படும் என்றார்.

அரசு தயாராக உள்ளது

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது: நாகையில் இருந்து மயிலாடுதுறை செல்ல வேண்டும் என்றால் புதுவை மாநிலத்தை கடந்து தான் செல்ல வேண்டியது உள்ளது. இதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் நலன் கருதி மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கருத்துகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கூறிய கருத்துக்கள் எல்லாவற்றையும் நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது என்றார்.

கூட்டத்தில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி நன்றி கூறினார்.

Next Story