ஊத்துக்குளி அருகே ரூ.80 லட்சத்தில் பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
ஊத்துக்குளி அருகே ரூ.80 லட்சம் மதிப்பில் பால் குளிரூட்டும் நிலையங்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குறிச்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பால் குளிரூட்டும் நிலைய திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பால் குளிரூட்டும் நிலையத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது-
விவசாயிகள் பயன்பெறும் வகையில் கோவை, ஈரோடு மாவட்டத்தில் இருந்து பிரித்து திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து தொடங்கி சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 446 சங்கங்களில் இருந்து நாளொன்றுக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. திருப்பூர் ஒன்றியத்தில் ஏற்கனவே 31 தொகுப்பு பால் குளிர்வு மையங்கள் உள்ளன. இவைகளின் மூலமாக நாளொன்றுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் கையாளப்படுகிறது. ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட குறிச்சி மற்றும் பள்ளத்தோட்டம் ஆகிய பகுதிகளில் விவசாயிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் தலா ரூ.40 லட்சம் மதிப்பில் தலா 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்துக்கு விவசாயிகள் அதிகளவு பால் வழங்கி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆய்வு
இதைத்தொடர்ந்து பள்ளத்தோட்டத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பால் குளிரூட்டும் நிலையத்தை அமைச்சர் திறந்து வைத்தார். முன்னதாக குறிச்சி ஊராட்சி பகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்தை அமைச்சர் ஆய்வு செய்து கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டரிடம் கேட்டறிந்தார்.
விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ், திருப்பூர் மாவட்ட ஆவின் சங்க தலைவர் மனோகரன், திருப்பூர் ஆர்.டி.ஓ.கவிதா, ஆவின்பொது மேலாளர் ராஜசேகர், கால்நடை பராமரிப்புத்துறை மண்டலஇணை இயக்குனர் பாரிவேந்தன், ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஜோதிநாத், விஜயகுமார், ஊத்துக்குளி தாசில்தார் கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story