இன்று ஆடி 3-வது வெள்ளி-வரலட்சுமி விரதம்: பூஜை பொருட்கள் வாங்க கடைவீதியில் குவிந்த பொதுமக்கள் கேள்விக்குறியானது, சமூக இடைவெளி


இன்று ஆடி 3-வது வெள்ளி-வரலட்சுமி விரதம்:  பூஜை பொருட்கள் வாங்க கடைவீதியில் குவிந்த பொதுமக்கள்  கேள்விக்குறியானது, சமூக இடைவெளி
x
தினத்தந்தி 31 July 2020 6:01 AM GMT (Updated: 31 July 2020 6:01 AM GMT)

இன்று ஆடி 3-வது வெள்ளி மற்றும் வரலட்சுமி பூஜையையொட்டி திருச்சி கடைவீதியில் சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள் குவிந்து காய்கறி மற்றும் பூஜை பொருட்களை வாங்கி சென்றனர்.

திருச்சி, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும்பொருட்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீடித்துக் கொண்டே செல்கிறது. ஆனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றி தான் கடைகளில் பொருட்களை வாங்கவேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கேள்விக்குறியான சமூக இடைவெளி

அரசின் இந்த அறிவிப்பு எல்லாம் பெயரளவில் தான் உள்ளது. பொருட்கள் வாங்குவதற்கு வெளியே வரும் மக்களிடம் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. இன்று ஆடி 3-வது வெள்ளிக்கிழமையாகும். இன்று வரலட்சுமி விரதமும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் பூஜை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்குவதற்காக காந்தி மார்க்கெட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பொதுமக்கள் குவிந்தனர்.

அவர்கள் தேங்காய், பூ, பழம், வாழை இலை மற்றும் வாழைக்கன்றுகள், மாவிலை தோரணம், தென்னங்கீற்று தோரணங்களை அதிக அளவில் வாங்கி சென்றனர். இதனால், காந்தி மார்க்கெட், வெங்காய மண்டி, மயிலம் சந்தை பகுதிகளில் நேற்று அவ்வப்போது வாகன நெரிசலும் ஏற்பட்டது. பெரிய கடைவீதியில் ஒருவழிப்பாதை விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் வாகனங்கள் அங்கும், இங்குமாக சென்றதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அவற்றை ஒழுங்குபடுத்த போலீசாரும் வரவில்லை. இதனால் பொருட்கள் வாங்குவதற்கு வந்த மக்கள் நெருக்கடியில் சிக்கி தவித்தனர்.

Next Story