குளித்தலையில் கடம்பவனேசுவரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அளவிட வந்த அதிகாரிகள் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


குளித்தலையில்  கடம்பவனேசுவரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அளவிட வந்த அதிகாரிகள் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 31 July 2020 6:45 AM GMT (Updated: 31 July 2020 6:45 AM GMT)

குளித்தலையில் கடம்பவனேசுவரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அளக்க வந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குளித்தலை, 

கரூர் மாவட்டம், குளித்தலை சுங்ககேட் அருகே குளித்தலை-மணப்பாறை மற்றும் குளித்தலை-கரூர் செல்லும் சாலைகள் இருக்கும் பகுதியில் சில ஏக்கர் இடம் உள்ளது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் பல்வேறு கடைகளும் உள்ளன. இந்த நிலம் நத்தம் புறம்போக்கு எனவும், கடம்பவனேசுவரர் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான இடம் என்றும் கூறப்பட்டு வந்ததுடன், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு இருந்தது. இறுதியாக இந்த நிலப்பிரச்சினை தொடர்பாக சென்னை நிலவரி திட்ட இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணை முடிவில், குளித்தலை சுங்ககேட் பகுதியில் உள்ள 3 ஏக்கர் 55 சென்ட் இடம் குளித்தலை கடம்பவனேசுவரர் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் சூரியநாராயணன் தலைமையில், கடம்பவனேசுவரர் கோவில் செயல் அலுவலர் ஆச்சி சிவப்பிரகாசம், ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் நேற்று சுங்ககேட் பகுதிக்கு சென்றனர். பின்னர் கோவிலுக்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்ட இடத்தை அளந்து, அதில் உள்ள குடியிருப்புகள், கடைகளை கணக்கெடுத்தனர்.

வாக்குவாதம்

அப்போது அந்த பகுதியில் குடியிருப்போர் அங்கு வந்து, தாங்கள் வசிக்கும் இடம் புறம்போக்கு இடமா? அல்லது கோவில் நிலமா என்பது குறித்து கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் எதற்காக எங்கள் பகுதிக்கு வந்து தொந்தரவு செய்கிறீர்கள். எங்களுக்கு வழக்கு தொடர உரிமை இருக்கும் பட்சத்தில், இங்கு அதிகாரிகள் வரக்கூடாது என்று, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவிலுக்கு சொந்தமான இடத்தை தான் நாங்கள் அளக்கின்றோம், நீங்கள் விரும்பினால் நீதிமன்றத்திற்கு சென்று பார்த்துக்கொள்ளுங்கள் எனக்கூறிவிட்டு, அதிகாரிகள் அளக்கும் பணியை தொடர்ந்தனர். இடத்தை அளக்க வந்த அதிகாரிகளிடம் குடியிருப்புவாசிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story