ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லை மும்பையில் 20 சதவீத குடிநீர் வெட்டு 5-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது + "||" + Inadequate rainfall in lakes catchment areas 20 per cent drinking water cut in Mumbai effective from 5th
ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லை மும்பையில் 20 சதவீத குடிநீர் வெட்டு 5-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது
ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் மும்பையில் 5-ந்தேதி முதல் 20 சதவீத குடிநீர் வெட்டு அமல்படுத்தப்படுகிறது.
மும்பை,
மும்பையில் கடந்த 2 மாதங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. பல நாட்கள் கொட்டி தீர்த்த மழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது.
போதிய மழையில்லை
இதேபோல வழக்கத்தைவிட கடந்த 1½ மாதத்தில் மும்பையில் அதிகளவு மழை பதிவாகி உள்ளது. எனினும் மும்பைக்கு குடிநீர் வழங்கும் 7 ஏரிகள் அமைந்து உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. துல்சி ஏரி நிரம்பி உள்ள போதும், அதில் இருந்து மும்பைக்கு தேவையான தண்ணீரில் 1 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது.
தற்போது மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 34.49 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது. இதேகாலகட்டத்தில் கடந்த ஆண்டு ஏரிகளில் 85.68 சதவீதமும், 2018-ம் ஆண்டு 83.30 சதவீதமும் தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த ஆண்டு ஏரிகளில் போதிய நீர் இல்லாமல் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
20 சதவீதம் குடிநீர் வெட்டு
இந்தநிலையில் மும்பையில் வருகிற 5-ந் தேதி முதல் 20 சதவீத குடிநீர் வெட்டு அமலுக்கு வருகிறது.
இது குறித்து மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2020-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதத்தில் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வழக்கத்தைவிட குறைந்தளவு தான் மழை பெய்து உள்ளது. இதன் காரணமாக தற்போது மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 34 சதவீதம் தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
இதேநிலை தொடர்ந்தால் மழைக்காலத்துக்கு பிறகும் கூட போதிய நீர் இருப்பு இருக்காது. இதனை கருத்தில் கொண்டு வரும் 5-ந் தேதி முதல் மும்பையில் 20 சதவீத குடிநீர் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இந்த குடிநீர் வெட்டு மும்பை மாநகராட்சி குடிநீர் வினியோகம் செய்யும் தானே, பிவண்டி மாநகராட்சி பகுதிகள் மற்றும் மற்ற கிராமங்களுக்கும் பொருந்தும். இதனால் பொதுமக்கள் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த மாநகராட்சி கேட்டுக்கொள்கிறது.