குண்டும், குழியுமாக மாறிய அக்ராவரம் மலைமேடு -பெல் சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
குண்டும், குழியுமாக மாறிய அக்ராவரம் மலைமேடு- பெல் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டை - பொன்னை சாலையில் இருந்து மலைமேடு வழியாக ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலைக்கு ஒரு சாலை செல்கிறது. இச்சாலை பெல் தொழிற்சாலை வழியாக திருவலம் எம்.பி.டி. சாலையை சென்றடைகிறது. மேலும் இச்சாலை ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள சிட்கோ எஸ்டேட் பகுதிக்கும் செல்கிறது.
இந்த எஸ்டேட்டில் பெல் நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் செய்து கொடுக்கும் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கு செல்பவர்களும், தொழிற்சாலை உதிரிபாகங்களை ஏற்றி செல்லும் லாரி, டிரெய்லர், ஆட்டோ, வேன், மாட்டுவண்டிகள் உள்ளிட்ட வாகனங்களும் இந்த சாலையைத் தான் பயன்படுத்துகின்றன.
இதேபோல், நெல்லிகுப்பம் அருகில் உள்ள சிட்கோ 3 தொழிற்பேட்டையில் உள்ள மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஸ்டீல் தொழிற்சாலைகள் என 50-க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகளும், 50-க்கும் மேற்பட்ட சிறிய தொழிற்சாலைகளும் இந்த வழியாகத் தான் வாகனங்களில் பொருட்களை எடுத்து செல்கின்றன.
மேலும் பெல் நிறுவனத்திற்கு செல்லும் முக்கிய சாலையாக இது இருப்பதால் தொழிற்சாலைக்கு செல்லும் தொழிலாளர்களும், பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
இச்சாலை அருகில் தான் முகுந்தராயபுரம் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு செல்லும் ரெயில் பயணிகளும் இச்சாலையைத் தான் பயன்படுத்துகின்றனர்.
இவ்வளவு முக்கியம் வாய்ந்த இந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இச்சாலை வழியாக சரக்கு ஏற்றி செல்லும் லாரி, டிரெய்லர், ஆட்டோ, மாட்டு வண்டிகள், வேன்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. சரக்கு ஏற்றி வரும் கனரக வாகனங்கள் சில நேரம் பள்ளத்தில் இறங்கிவிட்டு, ஏற முடியாமல் தவிக்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இப்போது மழைக்காலம் என்பதால், இச்சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக காணப்படுகிறது. மேலும் பள்ளங்கள் தெரியாமல் நடந்து செல்வோரும், வாகனங்களில் செல்வோரும் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இச்சாலையை சீரமைத்து விபத்தை தடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story