புதிய கல்வி கொள்கை குறித்து உரிய ஆய்வுக்கு பின் முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் காமராஜ் பேட்டி


புதிய கல்வி கொள்கை குறித்து உரிய ஆய்வுக்கு பின் முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 1 Aug 2020 3:45 AM IST (Updated: 1 Aug 2020 7:08 AM IST)
t-max-icont-min-icon

புதிய கல்வி கொள்கை குறித்து உரிய ஆய்வுக்கு பின் தமிழக அரசு முடிவு எடுக்கும் என்று திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் நகராட்சி சார்பில் நடந்த கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முக கவசங்களை வழங்கினார். பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய கல்வி கொள்கை குறித்து உரிய ஆய்வுக்கு பின் முடிவு எடுக்கப்படும். மத்திய அரசு எல்லா காலங்களிலும் மும்மொழி கொள்கையை தான் பின்பற்றி வந்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை சட்ட பாதுகாப்போடு இருமொழி கொள்கையை கடைபிடித்து வருகிறோம்.

கடந்த மாதம் அரிசி மற்றும் சமையல் எண்ணெய், பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வருவதற்கு முன்பு 2 நாட்கள் ஒரு சிலர் பணம் கொடுத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கியுள்ளனர். அவர்கள் இந்த மாதத்தில் ரேஷன் கடைகளில் இலவசமாக பொருட்களை வாங்கி கொள்ளலாம். திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி 82 ஆயிரம் ஏக்கர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தண்ணீர் பிரச்சினை ஏதும் இல்லாததால் 96 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார், உதவி கலெக்டர் ஜெயப்பீரித்தா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சந்தானம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பன்னீர்்செல்வம், கூட்டுறவு சங்க தலைவர்கள் மூர்த்தி, மணிகண்டன், கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குடவாசல் பஸ் நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு துரை, மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், உதவி கலெக்டர் ஜெயபிரீத்தா, மாவட்ட சுகாதார துணை இயக்குனர் விஜயகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பாப்பா.சுப்பிரமணியன், ஒன்றியக்குழு தலைவர் கிளாராசெந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி வரவேற்றார். முகாமை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்து பேசினார். இதேபோல கூத்தாநல்லூரில் மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியக்கோட்டி,நகராட்சி ஆணையர் லதா, தாசில்தார் மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் ஆகியவற்றை வழங்கினார். பின்னர் முகாமில் நடந்த பரிசோதனைகளை அவர் பார்வையிட்டார். இதில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் சந்தானம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story