தனியார் சிமெண்டு ஆலை முன்பு மொபட் மீது லாரி மோதியதில் மெக்கானிக் படுகாயம் - சிகிச்சைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கொடுக்காததால் பொதுமக்கள் முற்றுகை


தனியார் சிமெண்டு ஆலை முன்பு மொபட் மீது லாரி மோதியதில் மெக்கானிக் படுகாயம் - சிகிச்சைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கொடுக்காததால் பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 1 Aug 2020 3:00 AM IST (Updated: 1 Aug 2020 7:48 AM IST)
t-max-icont-min-icon

தனியார் சிமெண்டு ஆலை முன்பு மொபட் மீது லாரி மோதியதில் படுகாயமடைந்த மெக்கானிக்கை, சிகிச்சைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சு கொடுக்காததால் சிமெண்டு ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், ஓட்டக்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் அஜித்(வயது 18). இவர் அரியலூரில் உள்ள இரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்ற அஜித், வேலை முடிந்து இரவில் மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அரியலூர்- செந்துறை சாலையில் ஓட்டக்கோவிலில் உள்ள டால்மியா சிமெண்டு ஆலையின் நுழைவு வாயில் முன்புள்ள சாலையில் சென்ற போது, எதிரே டால்மியா சிமெண்டு ஆலைக்கு வாடகைக்கு ஓடும் லாரி ஒன்று, சிமெண்டு ஏற்றுவதற்காக ஆலைக்கு திரும்பியது. அப்போது அஜித் ஓட்டி சென்ற மொபட் மீது, அந்த லாரி மோதியது.

இதில் மொபட்டில் இருந்து கீழே விழுந்த அஜித் லாரியின் அடியில் சிக்கி படுகாயமடைந்தார். அப்போது லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை கண்ட அப்பகுதி மக்கள், அஜித்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சிமெண்டு ஆலை நிர்வாகத்திடம் ஆம்புலன்சு கேட்டுள்ளனர். அதற்கு டால்மியா சிமெண்டு ஆலை நிர்வாகம் மழையின் காரணமாக ஆம்புலன்சு அனுப்ப முடியாது என்று கூறியதாக தெரிகிறது. பின்னர் அஜித்தை கிராம மக்கள் ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்காக அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்சு கொடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் டால்மியா சிமெண்டு ஆலையை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சிமெண்டு ஆலைக்கு வரும் லாரிகள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சாலையில் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் தலைமையில் நெடுஞ்சாலை ரோந்து பணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமேனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விபத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இது தொடர்பாக அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story