குளித்தலையில் பரபரப்பு: நகராட்சி ஆணையர் உள்பட 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம் - ரூ.60 லட்சம் மோசடி வழக்கில் நடவடிக்கை


குளித்தலையில் பரபரப்பு: நகராட்சி ஆணையர் உள்பட 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம் - ரூ.60 லட்சம் மோசடி வழக்கில் நடவடிக்கை
x
தினத்தந்தி 31 July 2020 9:30 PM GMT (Updated: 1 Aug 2020 2:33 AM GMT)

ரூ.60 லட்சம் மோசடி வழக்கில், குளித்தலை நகராட்சி ஆணையர், பொறியாளர் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் கடந்த ஆண்டு வளர்ச்சி பணிகள் திட்டத்தில் நிதி செலவிடப்பட்டது குறித்து கடந்த 10 நாட்களாக வருடாந்திர ஆய்வு நடைபெற்றது. இதில், பல்வேறு கணக்குகளை ஆய்வு செய்ததில் ரூ.60 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இந்த மோசடி குறித்து, சேலம் மண்டல நகராட்சிகளின் இயக்குனர் அசோக்குமாருக்கு தணிக்கை குழுவினர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அவர் தணிக்கை குழுவினருடன் குளித்தலை நகராட்சியில் அண்மையில் முகாமிட்டு ஆய்வு செய்தார்.

அதில், குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றும் திருச்சி கம்பரசம்பேட்டையை சேர்ந்த சத்யா (வயது 45) என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் 2019-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் நகராட்சி ஊழியர்களின் பொதுசேமநல நிதி, தன்பங்கேற்பு ஓய்வூதிய நிதி, சேமநல நிதி மற்றும் நகராட்சி நிர்வாக நிதிகளை திறந்த காசோலைகளாக வழங்கி ரூ.59 லட்சத்து 73 ஆயிரத்து 435 மோசடி செய்தது தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக குளித்தலை நகராட்சி ஆணையர் மோகன்குமார், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், கணக்காளர் சத்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து துறைரீதியாக விசாரணை நடத்தியதில், கணக்குகளை முறையாக பராமரிக்காமலும், மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக, குளித்தலை நகராட்சி ஆணையர் மோகன்குமார், பொறியாளர் புகழேந்தி, கணக்காளர் சத்யா, இருக்கை எழுத்தர் யசோதாதேவி, வருவாய் உதவியாளர் சரவணன் மற்றும் நகராட்சி முன்னாள் பொறுப்பு ஆணையரும், பொறியாளருமான கார்த்திகேயன் ஆகிய 6 பேரையும், சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான கடிதம் சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் இருந்து, சேலம் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. பின்னர் கரூர் நகராட்சி ஆணையர் உள்பட 5 பேருக்கும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான கடிதம் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. கணக்காளர் சத்யா வீடு பூட்டப்பட்டு இருந்ததால், அவரது வீட்டின் முன்பக்க கதவில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான கடிதம் ஒட்டப்பட்டது.

இந்தநிலையில், நேற்று கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் குளித்தலை நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் மோகன்குமார், புகழேந்தி, யசோதாதேவி, சரவணன் ஆகிய 4 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மேலும், குளித்தலை நகராட்சியில் தொடர்ந்து தணிக்கை செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், தணிக்கை பணி முழுமையாக முடிந்த பின்னரே மோசடி செய்யப்பட்ட மொத்த தொகை எவ்வளவு என்று தெரியவரும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் ரூ.1 கோடிவரை மோசடி நடந்திருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

Next Story