தாய் ஊட்டியபோது பரிதாபம்: தொண்டையில் கோழிக்கறி சிக்கி சிறுவன் பலி
தாய் ஊட்டியபோது தொண்டையில் கோழிக்கறி சிக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
வடவள்ளி,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் காமாட்சி (வயது 35). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கோவை தொண்டாமுத்தூருக்கு வந்து கூலி வேலை செய்தார். அப்போது அசாம் மாநிலத்தை சேர்ந்த பிங்கி (30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் கபிலேஷ் என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் காமாட்சிக்கும், பிங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பிங்கி தனது கணவரை பிரிந்து வடவள்ளியை சேர்ந்த லிங்கேஷ் என்பவருடன் தனது மகனுடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று, லிங்கேஷ் சமைப்பதற்காக கறிக்கோழி வாங்கி வந்தார். அதை லிங்கேஷ் குடும்பத்தினர் சமைத்து சாப்பிட்டனர். அப்போது பிங்கி தனது மகன் கபிலேசுக்கு கோழிக்கறியை ஊட்டி விட்டு தானும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். திடீரென கோழிக்கறி துண்டு ஒன்று சிறுவன் தொண்டையில் சிக்கியது.
இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுவன் சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தான். உடனே அதிர்ச்சி அடைந்த பிங்கி மற்றும் லிங்கேஷ், சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து தகவல் அறிந்த சிறுவன் கபிலேசின் தந்தை காமாட்சி, தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக வடவள்ளி போலீசில் புகார் செய்தார். அத்துடன் தனது மகனின் உடலை தன்னிடமே கொடுக்க வேண்டும் என்றும் போலீசாரிடம் கூறினார். இதையடுத்து சிறுவனின் உடல் காமாட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதை அவர் தொண்டாமுத்தூர் சுடுகாட்டில் அடக்கம் செய்தார்.
Related Tags :
Next Story