பாம்பனில் புதிய முறையில் விசைப்படகை கரையேற்றிய மீனவர்கள்


பாம்பனில் புதிய முறையில் விசைப்படகை கரையேற்றிய மீனவர்கள்
x
தினத்தந்தி 1 Aug 2020 11:00 AM IST (Updated: 1 Aug 2020 11:01 AM IST)
t-max-icont-min-icon

பாம்பனில் மீன்பிடி விசைப்படகு ஒன்றை கரையில் ஏற்ற பலூன்களை பயன்படுத்தி அதன் மூலம் அந்த படகை கரைக்கு கொண்டு வந்தனர்.

ராமேசுவரம், 

மீன்பிடி தொழிலை நம்பி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்பட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விசைப்படகுகள் உள்ளன. இந்த விசைப்படகுகளை மராமத்து செய்ய மீனவர்கள் கரைக்கு ஏற்றுவது வழக்கம். இதற்கு மீனவர்கள் கட்டைகளை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் பாம்பனில் முதல்முறையாக வெளிநாட்டு தொழில் நுட்பத்தில் நேற்று மீன்பிடி விசைப்படகு ஒன்றை கரையில் ஏற்ற பலூன்களை பயன்படுத்தி அதன் மூலம் அந்த படகை கரைக்கு கொண்டு வந்தனர்.

இது பற்றி பாம்பன் மீனவர் நேவிஸ் கூறியதாவது:-

பழைய முறைப்படி படகை கரையில் ஏற்றினால், அதிக தொழிலாளர்கள் தேவைப்படுவர். மேலும் அவர்கள் காயம் அடைந்து வந்தனர். முதல்முறையாக வெளிநாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலூன்கள் மூலம் மீன்பிடி விசைப் படகை கடலில் இருந்து கரையில் ஏற்றி உள்ளோம். இதற்காக தூத்துக்குடியில் இருந்து ராட்சத பலூன்கள் மற்றும் அதற்கான எந்திரங்கள் பாம்பன் கொண்டு வரப்பட்டது. கரைக்கு அருகே படகு கொண்டுவரப்பட்டு அதன் கீழ் பலூன்களை வைத்து காற்று நிரப்பி படகு கரையேற்றப்பட்டது. இதற்கு ரூ.40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வாடகை நிர்ணயம் செய்யப்படுகிறது. பெரிய துறைமுக பகுதிகளில் இழுவை கப்பல் மற்றும் பெரிய படகுகளை கடலில் இருந்து கரைக்கு இழுத்துவர இந்த பலூன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story