பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்


பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்
x
தினத்தந்தி 1 Aug 2020 10:30 PM GMT (Updated: 1 Aug 2020 8:37 PM GMT)

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.

நெல்லை,

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், பள்ளிவாசல்கள், மைதானங்களில் தொழுகை நடத்த அனுமதிக்கப்படவில்லை. எனவே முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தினர்.

நெல்லை மேலப்பாளையத்தில் முஸ்லிம்கள் தங்களது வீடுகளின் முன்பு தெருவில் அமர்ந்து சமூக இடைவெளியை கடைபிடித்து, பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர். பெரும்பாலானவர்கள் தங்களது வீடுகளின் மாடியில் குடும்பத்துடன் அமர்ந்து தொழுகை நடத்தினர். மேலப்பாளையம் அக்பர் தெருவிலும் முஸ்லிம்கள் தங்களது வீடுகளின் முன்பு தொழுகை நடத்தினர்.

முஸ்லிம்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் தொழுகையில் ஈடுபட்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துகள் தெரிவிப்பதை தவிர்த்தனர். எனினும் வழக்கம்போல் ஏழைகளுக்கு பித்ரா அரிசி, இறைச்சி, நிதி உதவி போன்றவற்றை வழங்கினர்.

மேலும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் சார்பிலும் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. சிறுவர்-சிறுமிகள் புத்தாடை அணிந்து, தொழுகை நடத்திய பின்னர் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

நெல்லை டவுன், சந்திப்பு, பாளையங்கோட்டை, பர்கிட்மாநகரம், பேட்டை உள்ளிட்ட இடங்களிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம்கள் தங்களது வீடுகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து தொழுகை நடத்தினர்.

நெல்லை பேட்டை ரொட்டிக்கடை பஸ் நிறுத்தம் அருகில் உள்ள நவாப் வாலாஜா பள்ளிவாசல் பகுதியில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்த 100-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். இது பற்றி தகவல் அறிந்த பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பழனிமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தொழுகை நடத்த முயற்சி செய்தவர்களிடம் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளதால், அங்கு தொழுகை நடத்தக்கூடாது என்று கூறினார்கள்.

இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு தொழுகை நடத்தாமல் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதேபோல் கடையநல்லூரில் முஸ்லிம்கள், தங்கள் வீட்டு வாசல்களில் தனித்தனியாக தொழுகையில் ஈடுபட்டனர். இதேபோன்று ரகுமானியாபுரம், மக்காநகர், மதினா நகர், தவ்ஹீத் நகர், இக்பால் நகர், மாவடிக்கால், திரிகூடபுரம், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி, அச்சன்புதூர், வடகரை, செங்கோட்டை, வாவா நகரம், வீராணம், மாலிக்நகர், பொட்டல்புதூர் போன்ற ஊர்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Next Story