பாகல்கோட்டை அருகே நண்பரின் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற வாலிபர் படுகொலை - போலீசார் விசாரணை


பாகல்கோட்டை அருகே நண்பரின் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற வாலிபர் படுகொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 2 Aug 2020 4:39 AM IST (Updated: 2 Aug 2020 4:39 AM IST)
t-max-icont-min-icon

பாகல்கோட்டை அருகே, நண்பரின் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாகல்கோட்டை,

பாகல்கோட்டை அருகே நிரலகேரி கிராமத்தில் வசித்து வந்தவர் ரங்கப்பா சந்திரசேகர் தல்வார்(வயது 22). இவர் டிரைவர் ஆவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரங்கப்பாவின் நண்பர் கிருஷ்ணாவுக்கு பிறந்தநாள் ஆகும். இதனால் கிருஷ்ணா தனது நண்பர்களுடன் தன்னுடைய பிறந்தநாளை கிராமத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத்தின் முன்பு கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள ரங்கப்பா சென்று இருந்தார்.

ஆனால் நள்ளிரவு ஆகியும் ரங்கப்பா தனது வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் ரங்கப்பாவை தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோதும் அவர் போனை எடுத்து பேசவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை கிராமத்திற்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு இடத்தில் ரங்கப்பா தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த வெட்டுகாயத்துடன் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்த அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று ரங்கப்பாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாகல்கோட்டை புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரங்கப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் ரங்கப்பாவை மர்மநபர்கள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

ஆனால் ரங்கப்பாவை கொலை செய்த மர்மநபர்கள் யார்?, என்ன காரணத்திற்காக கொலை நடந்தது? என்பது உடனடியாக போலீசாருக்கு தெரியவில்லை. பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட தகராறில் ரங்கப்பாவை, அவரது நண்பர்கள் கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த படுகொலை சம்பவம் குறித்து பாகல்கோட்டை புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் பாகல்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story