பக்ரீத் பண்டிகை சமூக இடைவெளியை கடைப்பிடித்து முஸ்லிம்கள் சிறப்புத்தொழுகை


பக்ரீத் பண்டிகை சமூக இடைவெளியை கடைப்பிடித்து முஸ்லிம்கள் சிறப்புத்தொழுகை
x
தினத்தந்தி 2 Aug 2020 1:12 AM GMT (Updated: 2 Aug 2020 1:12 AM GMT)

புதுச்சேரியில் நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி சமூக இடை வெளியை கடைப்பிடித்து முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர்.

புதுச்சேரி,

இஸ்லாமியர்களின் முக்கிய திருநாளாம் பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவையில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடந்தன. இதில் வழக்கமான உற்சாகத்துடன் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். முல்லாவீதி, பெரியகடை, கோட்டக்குப்பம், நெல்லித்தோப்பு, சுல்தான்பேட்டை, கொம்பாக்கம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி சமூக இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து ஏராளமான முஸ்லிம்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.

காரைக்கால் மாவட்டத்தின் பெரிய பள்ளி வாசலான மஸ்தான்சாகிப் வலியுல்லா மற்றும் மஸ்ஜிதே ஹூசையானா பள்ளி வாசல், கணபதி நகர் மஸ்ஜிதுத் தக்வா, மெய்தீன், மீரா பள்ளிவாசல் மற்றும் திருநள்ளாறு, கருக்கன்குடி, திரு-பட்டினம், அம்பகரத்தூர், நல்லம்பல் உள்ளிட்ட ஏராளமான பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

பள்ளி வாசல்களுக்கு வந்த இஸ்லாமியர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைப்பிடித்தும் சிறப்பு தொழுகை நடத்தினர். அதனைதொடர்ந்து உணவு, உடை, இறைச்சி உள்ளிட்டவைகளை மற்றவர்களுக்கு தானம் வழங்கி மகிழ்ந்தனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வரவும், ஆரோக்கியமாக வாழ வேண்டியும் பள்ளிவாசல்களில் பிரார்த்தனை நடத்தப்பட்டது. தொழுகை முடிந்ததும் கட்டித்தழுவி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தலையொட்டி வலது கையை நெஞ்சில் வைத்து முஸ்லிம்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதையொட்டி தங்களது நண்பர்கள், உறவினர் களுக்கு குர்பானி விருந்து கொடுத்தும் மகிழ்ந்தனர்.

Next Story