சாராயக்கடை ஏலம் எடுக்கும் விவகாரம்: கலால்துறை அலுவலகம் திடீர் முற்றுகை


சாராயக்கடை ஏலம் எடுக்கும் விவகாரம்: கலால்துறை அலுவலகம் திடீர் முற்றுகை
x
தினத்தந்தி 2 Aug 2020 6:48 AM IST (Updated: 2 Aug 2020 6:48 AM IST)
t-max-icont-min-icon

சாராயக்கடைகளை ஏலம் எடுக்கும் விவகாரத்தில் புதுச்சேரி கலால்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

புதுவை கலால் துறையில் கிஸ்தி தொகை செலுத்தாத 33 சாராயக் கடைகளுக்கு மறு ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்பு பவர்கள் ரூ.7 லட்சம் முன் பணமாக செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சாராயக் கடையை ஏலம் எடுக்க விரும்பி கடந்த 27-ந் தேதி முதல் முன்பணம் செலுத்தி வந்தனர். நேற்று முன்தினம் மாலையுடன் முன்பணம் செலுத்துவது முடிந்தது.

இதற்கான காலக்கெடு குறைவாக இருந்ததால் நேற்று காலையிலும் வியாபாரிகள் சிலரிடம் கலால் துறை சார்பில் முன்பணம் வரப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இணையதளம் மூலம் நடந்த சாராயக்கடை ஏலத்துக்கான பாஸ்வேர்ட் (கடவுச்சொல்)வழங்கப்படவில்லை. இந்தநிலையில் நேற்று காலை முதலே சாராயக்கடைகள் ஏலம் இணையதளம் மூலம் நடந்தது.

பாஸ்வேர்டு கிடைக்காததால் நேற்று பணம் செலுத்தியவர்களால் இந்த ஏலத்தில் கலந்துகொள்ள இயலவில்லை. இதனால் அவர்கள் கலால்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏலத்தில் பங்கேற்க முடியாது என்றால் ஏன் முன்பணம் பெற வேண்டும் என்று அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.

இதைத்தொடர்ந்து முன் பணத்தொகை மீண்டும் திருப்பி வழங்கப்பட்டது. அதன்பின் சாராயக்கடை ஏலம் எடுக்க வந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் நேற்று மாலை கலால்துறை அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story