ஆம்புலன்ஸ் வராததால் கொரோனாவால் பலியான மூதாட்டியின் உடலை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற அவலம்
ஆம்புலன்ஸ் வராததால் கொரோனாவால் இறந்த மூதாட்டியின் உடலை, தள்ளுவண்டியில் எடுத்து சென்று தகனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்,
தேனி மாவட்டம் கூடலூர் அழகுபிள்ளை தெருவை சேர்ந்த 80 வயது மூதாட்டிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய உறவினர்கள், கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூதாட்டியை சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பினார்.
முன்னதாக சிகிச்சை பெற்ற அவருக்கு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில், மூதாட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக மூதாட்டி அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் மூதாட்டி திடீரென்று இறந்தார்.
இதுகுறித்து கூடலூர் நகராட்சி சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உடலை எடுத்து செல்ல சுகாதாரத்துறையினர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் மதியம் 12 மணி நேரம் வரை ஆம்புலன்ஸ் வரவில்லை. இதற்கிடையே மூதாட்டியின் உடலை அங்கிருந்து விரைந்து எடுத்து செல்ல அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
அதேநேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கு தாமதமாகி கொண்டிருந்தது. இதனால் உடலை கொண்டு செல்வதில் சுகாதாரத்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டது. வேறு வழி தெரியாமல் தள்ளுவண்டி மூலம் கூலித்தொழிலாளி ஒருவரிடம் உடலை கொண்டு செல்லும்படி மூதாட்டியின் மகன் கூறினார். இதையடுத்து மூதாட்டியின் உடல் துணியால் மூடப்பட்டு தள்ளுவண்டியில் ஏற்றப்பட்டது.
கூடலூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக உடல் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதற்கிடையே கொரோனா பாதித்து இறந்த மூதாட்டியின் உடலை உரிய பாதுகாப்பு இல்லாமல் தள்ளுவண்டியில் கொண்டு சென்று தகனம் செய்த கூலித்தொழிலாளி அப்பகுதியில் சுற்றித்திரிகிறார்.
இதனால் அப்பகுதியில் கொரோனா தொற்று ஏற்படுமோ? என்ற பீதியில் பொதுமக்கள் உள்ளனர். சுகாதாரத்துறையினரின் அலட்சியத்தால், மூதாட்டியின் உடலை தள்ளுவண்டியில் எடுத்து செல்லும் அவலநிலை ஏற்பட்டது அப்பகுதி மக்களை வேதனை அடைய செய்துள்ளது. கூடலூரில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story