உளுந்தூர்பேட்டை அருகே, மின்வேலியில் சிக்கி ஆட்டுப்பண்ணை உரிமையாளர் பலி


உளுந்தூர்பேட்டை அருகே, மின்வேலியில் சிக்கி ஆட்டுப்பண்ணை உரிமையாளர் பலி
x
தினத்தந்தி 1 Aug 2020 10:45 PM GMT (Updated: 2 Aug 2020 2:55 AM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே மின்வேலியில் சிக்கி ஆட்டுப்பண்ணை உரிமையாளர் பலியானார்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே செட்டியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் தனபால்(வயது 46). இவர் சொந்தமாக 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை பராமரித்து வளர்த்து வந்தார். இந்த நிலையில் தனபால், வரஞ்சரம் அருகே உள்ள பொறையூர் கிராமத்தில் பட்டி போட்டு ஆடுகள் வளர்த்து வந்தார். சம்பவத்தன்று பட்டியில் இருந்த ஒரு ஆடு காணாமல் போனதாக தெரிகிறது. இதையடுத்து தனபால், அந்த ஆட்டை தேடிக்கொண்டு சென்றார். அப்போது அங்குவயல்வெளி ஓரமாக இருந்த ஆட்டை ஓட்டிக் கொண்டு பட்டியை நோக்கி வந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக வயலில் போட்டிருந்த மின்வேலியில் தனபாலின் கால் பட்டதாக தெரிகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தனபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை செய்து தனபாலின் உடலை உறவினர்களிடம் கொடுப்பதற்கு காலதாமதம் ஆனதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் எலவனாசூர்கோட்டை அருகே உள்ள செம்பியன்மாதேவி கிராமத்தில் உளுந்தூர்பேட்டை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக இறந்தவரின் உடலை தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்று அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story