ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை உயர்த்தும் பணி தீவிரம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை உயர்த்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் ஆண்டாள் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருவது வழக்கம்.
இவ்வாறு வருபவர்களில் ஏராளமான பேர் ரெயில் மூலமாக தான் வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு 3 முறை எக்ஸ்பிரஸ் ரெயில்களும் 6 முறை பயணிகள் ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்கள் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு மட்டுமின்றி இப்பகுதியில் இருந்து வெளியூருக்கு வேலைக்கு செல்பவர்களுக்கும் உதவியாக இருந்தது.
இந்தநிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 3 மாதத்திற்கு மேலாக ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்நிலையம் மூடப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்நிலையத்தில் 2-வது நடைமேடை மிகவும் தாழ்வாக இருக்கும். இதனால் ரெயிலில் இருந்து பயணிகள் இறங்கும் போது மிகவும் அவதிப்பட்டனர்.
அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் பெரும் சிரமத்துடன் இறங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதையடுத்து நடைமேடையை உயர்த்த வேண்டும் என பயணிகள் அனைவரும் ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல இங்கு நடை மேம்பாலம் இல்லை. இதனால் பயணிகள் தண்டவாளங்களை கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா முத்தையா எம்.எல்.ஏ.வும், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமாரும் ரெயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை மனு அளித்தனர்.
இவர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது ரெயில் இயக்கப்படாத சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டு நடைமேடை உயர்த்தும் பணி மற்றும் நடை மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Related Tags :
Next Story