பெரம்பலூரில், கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி; டாக்டர்- போலீஸ் ஏட்டு உள்பட 20 பேருக்கு தொற்று
பெரம்பலூரில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் மாவட்டத்தில் டாக்டர்-போலீஸ் ஏட்டு உள்பட 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு சித்த மருத்துவர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தை சேர்ந்த கனகசாமியின் மனைவி புஷ்பா(வயது 82) திருச்சி அரசு மருத்துவமனையிலும், அதே கிராமத்தை சேர்ந்த முத்துகுமார்(68) திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் 2 பேரும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் தாலுகா அம்மாபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த பாண்டியன்(45), நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் நேற்று ஓரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சோமண்டாபுதூரை சேர்ந்த 21 வயதுடைய கர்ப்பிணிக்கும், விஜயபுரத்தில் தந்தையை தொடர்ந்து, அவரது 10 வயது மகளுக்கும், வெங்கனூரை சேர்ந்தவரும், பெரம்பலூர் டவுன் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் 47 வயது ஆண் ஒருவருக்கும், தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர்கள் 2 பேருக்கும், வேப்பூரை சேர்ந்த 29 வயதுடைய பெண் டாக்டரும், குன்னம், வாலிகண்டபுரம், எசனை, அம்மாபாளையம், பெரம்பலூர், வெங்கடேசபுரம், தீரன் நகர், ஆலம்பாடி ரோடு மற்றும் தங்கபுரம், புஜங்கராயநல்லூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மொத்தம் 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 15 பேர் ஆண்கள் ஆவார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 477-ல் இருந்து 497 ஆக உயர்ந்துள்ளது. இதில் 296 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 199 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
Related Tags :
Next Story