திருச்சி விமான நிலையம் அருகே, மரத்தில் கார் மோதி வாலிபர் சாவு - பக்ரீத் பண்டிகை கொண்டாட ஊருக்கு சென்றபோது பரிதாபம்


திருச்சி விமான நிலையம் அருகே, மரத்தில் கார் மோதி வாலிபர் சாவு - பக்ரீத் பண்டிகை கொண்டாட ஊருக்கு சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 2 Aug 2020 3:45 AM IST (Updated: 2 Aug 2020 9:10 AM IST)
t-max-icont-min-icon

பக்ரீத் பண்டிகையை கொண்டாட ஊருக்கு காரில் சென்றபோது நடந்த விபத்தில் தனியார் நிறுவன அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

திருச்சி, 

கோவை உக்கடம் காந்திநகரை சேர்ந்தவர் சாகுல் அமீது மகன் மசூத் (வயது 24). இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மனநல காப்பகத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தார். இவர் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது நண்பர்கள் 2 பேருடன் ஒரு காரில் கோவைக்கு புறப்பட்டார்.

காரை திருச்சி உறையூர் பாண்டமங்கலத்தை சேர்ந்த ரபீக் (27) ஓட்டினார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் அந்த கார் புதுக்கோட்டை-திருச்சி மெயின்ரோட்டில் திருச்சி விமான நிலையம் அருகே வந்தபோது, திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டது.

இதனால் கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்ற ஒரு மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மசூத் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். காரில் இருந்த திருப்பூர் அனுமந்தபுரத்தை சேர்ந்த மார்த்தாண்ட பூபதி (33), உறையூர் பாத்திமா நகரை சேர்ந்த விவேக் (28) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து பற்றி திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிந்துநதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story