பாலக்கோடு அருகே, காதல் திருமணம் செய்த வாலிபர் அடித்துக்கொலை


பாலக்கோடு அருகே, காதல் திருமணம் செய்த வாலிபர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 2 Aug 2020 4:45 AM IST (Updated: 2 Aug 2020 9:47 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பாலக்கோடு, 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பஞ்சப்பள்ளி ஒட்டர் திண்ணை பகுதியை சேர்ந்தவர் மாதேவன். இவருடைய மகன் விஜய் (வயது 24). இவர் பெங்களூருவில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். விஜய், பிக்கனஅள்ளி பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி (22) என்ற பெண்ணை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் கணவன்-மனைவி 2 பேரும் ஒரு மாதம் மட்டும் குடும்பம் நடத்தி வந்தனர். அதன்பின்னர் ராஜேஸ்வரி பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். இதனால் விஜய் பெங்களூருக்கு சென்று காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த விஜய் நேற்று முன்தினம் மாமனார் வீட்டுக்கு சென்று வருவதாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் கூறி சென்றவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

மேலும் அவருடைய செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் இரவு மாமனார் வீட்டிலேயே விஜய் தங்கி இருப்பார் என்று குடும்பத்தினர் கருதினர். இந்தநிலையில் நேற்று காலை பாலக்கோடு அருகே உள்ள காடுசெட்டிப்பட்டி-பஞ்சப்பள்ளி சாலையில் பாரூரான்கொட்டாய் என்ற இடத்தில் உடலில் பலத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக பஞ்சப்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது வாலிபரின் கழுத்து மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. இதனால் அந்த வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் விஜய் என்பது தெரியவந்தது. இதுபற்றி அவருடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பார்த்து கதறி அழுதனர்.

பின்னர் போலீசார், விஜய்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மாமனார் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்ற வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story