கொரோனா ஊரடங்கால் வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்தி பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்
கொரோனா ஊரடங்கு காரணமாக நேற்று வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்தி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.
சேலம்,
முஸ்லிம்களின் தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்கப்படவில்லை.
இதனால் சேலத்தில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கொண்டு தங்கள் வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தி பக்ரீத்தை கொண்டாடினர். அப்போது ஒரு சிலர் தங்கள் உறவினர்களுடன் சேர்ந்து வீட்டின் மொட்டை மாடியில் சிறப்பு தொழுகை நடத்தினர். மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக இடைவெளியுடன் ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். மேலும் முஸ்லிம்கள் மதியம் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பிரியாணி விருந்து படைத்தனர். சேலத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி மசூதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
தம்மம்பட்டியில் ஜாமியா மஸ்ஜித்தின் கூடுதல் பொறுப்பு முத்தவல்லியும், செயலாளருமான ஷாஜகான் வீடுகளிலேயே எப்படி சமூக இடைவெளி விட்டு தொழுகை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். அதன்படி நேற்று தம்மம்பட்டி பகுதியில் இருக்கும் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே குடும்பத்துடன் சிறப்பு தொழுகை நடத்தினர். மேலும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ஒரு சிலர் மட்டுமே குருபானி என்னும் ஆட்டு இறைச்சியை தானமாக கொடுத்து தியாகத்திருநாளை கொண்டாடினர். பக்ரீத் பண்டிகையையொட்டி தம்மம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இதே போல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.
Related Tags :
Next Story