தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மூலம் புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்


தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மூலம் புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்
x
தினத்தந்தி 2 Aug 2020 11:30 AM IST (Updated: 2 Aug 2020 11:20 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மூலம் புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது என கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை,

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, வாலாஜா, காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 207 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் கொரோனா காலத்தில் ஏற்பட்ட முழு ஊரடங்கால், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களின் குடும்பங்களை சேர்ந்த புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பி வந்த இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தலா ரூ.1 லட்சம் வரை நீண்ட கால கடனாக தொழில் திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.

இந்த நிதியை பெற புலம் பெயர்ந்து சொந்த ஊர் திரும்பிய 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், 18 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த நிதி உதவியை பெற ஆற்காடு, வாலாஜா, காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர் ஆகிய வட்டாரங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் மாவட்ட திட்ட செயலாக்க அலகு, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் 0416-2900545 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் இதற்கான முகாம்கள் நாளை (திங்கட்கிழமை) வாலாஜா ஒன்றியம், டி.என்.ஆர்.டி.பி. வட்டார அலுவலகம், தென்கடப்பந்தாங்கலிலும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நெமிலி ஒன்றியம், டி.என்.ஆர்.டி.பி. வட்டார அலுவலகம், நெடும்புலியிலும், 5-ந் தேதி காவேரிப்பாக்கம் ஒன்றியம், டி.என்.ஆர்.டி.பி. வட்டார அலுவலகம் சிறுகரும்பூரிலும், 6-ந்தேதி சோளிங்கர் ஒன்றியம், சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 7-ந் தேதி ஆற்காடு ஒன்றியம், டி.என்.ஆர்.டி.பி. வட்டார அலுவலகம், முப்பதுவெட்டியிலும் நடைபெறும்.

இந்தத் தகவலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

Next Story