குமரியில் மேலும் 3 பேரின் உயிரை பறித்த கொரோனா - புதிதாக 133 பேருக்கு தொற்று


குமரியில் மேலும் 3 பேரின் உயிரை பறித்த கொரோனா - புதிதாக 133 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 2 Aug 2020 12:00 PM IST (Updated: 2 Aug 2020 12:16 PM IST)
t-max-icont-min-icon

குமரியில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியானார்கள். 133 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் அசுர வேகத்தில் கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. கொரோனாவால் அனைத்து தரப்பினரும் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடக்கூடியவர்களும் விதிவிலக்கல்ல என்பதற்கேற்ப, பாதிக்கக்கூடியவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதனால் மாவட்ட மக்கள் கொரோனா பாதிப்பு இன்று குறைந்து விடாதா? நாளை குறைந்து விடாதா? என எதிாபார்த்து ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

நேற்று முன்தினம் வரையில் குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 4788 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 46 ஆகவும் இருந்தது. நேற்றும் ஒரு பெண் உள்பட 3 பேரின் உயிரை கொரோனா பறித்தது. அதாவது, நாகர்கோவில் வடிவீஸ்வரத்தைச் சேர்ந்த 43 வயது ஆண், மாங்கரை பகுதியை சேர்ந்த 63 வயது முதியவர், வேதக்காரன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 73 வயது முதியவர் ஆகிய 3 பேர் இறந்துள்ளனர். இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் கொரோனாவுக்கு நேற்றும் 133 பேர் பாதிக்கப்பட்டனர். நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் மட்டும் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4,921 பேர் ஆகும்.

நாகாகோவில் வடசேரி போலீஸ் நிலையத்தைச் சோந்த 3 போலீசாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் வடசேரி போலீஸ் நிலையத்தில் நேற்று மாலை கிருமி நாசினி மருந்து தெளித்து மூடப்பட்டது. இந்த போலீஸ் நிலையம் 3-வது முறையாக நேற்று மூடப்பட்டுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த போலீஸ் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Next Story