ஆடிப்பெருக்கை கொண்டாட தடையை மீறி மயிலாடுதுறை துலா கட்டத்தில் கூடிய பெண்கள் - கொரோனா அச்சுறுத்தலை மறந்து காவிரி கரையில் உற்சாகம்


ஆடிப்பெருக்கை கொண்டாட தடையை மீறி மயிலாடுதுறை துலா கட்டத்தில் கூடிய பெண்கள் - கொரோனா அச்சுறுத்தலை மறந்து காவிரி கரையில் உற்சாகம்
x
தினத்தந்தி 3 Aug 2020 5:08 AM IST (Updated: 3 Aug 2020 5:08 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் பெண்கள் கொரோனா அச்சுறுத்தலை மறந்து காவிரி துலா கட்டத்தில் தடையை மீறி கூடி ஆடிப்பெருக்கை உற்சாகமாக கொண்டாடினர்.

குத்தாலம், 

கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகி தமிழகம் வழியாக கரைபுரண்டோடும் காவிரி ஆறு மக்களின் வாழ்வுக்கு வளம் சேர்த்து வருகிறது. காவிரி ஆற்றை தெய்வமாகவே பாவித்து மக்கள் வழிபட்டு வருகிறார்கள். ஆடி மாதம் 18-ம் நாள் காவிரி அன்னையை வழிபடுவதற்காகவே ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பெருக்கு நாளில் காவிரி கரையோர மாவட்டங்களில் மக்கள் மத்தியில் காவிரி ஆற்று வெள்ளத்துடன் உற்சாகமும் கரைபுரண்டோடும். இந்த உற்சாக நாளில் பெண்கள் பச்சரிசி, வெல்லம், மஞ்சள், குங்குமம், பூக்கள் உள்ளிட்ட மங்கல பொருட்களை காவிரி ஆற்றங்கரைக்கு எடுத்து வந்து வழிபாடு செய்வார்கள். ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிற்றை அணிவித்து வாழ்வு செழிக்க காவிரி அன்னையை மனமுருக வேண்டிக்கொள்வார்கள். புதுமண தம்பதிகள் தங்கள் மணமாலையை காவிரி ஆற்றில் விட்டு மகிழ்வார்கள்.


ஆடிப்பெருக்கு நாளில் காவிரி ஆற்றங்கரை மட்டுமல்லாது அதன் கிளை ஆறுகள், குளங்கள், ஏரி கரைகளிலும் பெண்கள் வழிபாடு செய்வார்கள்.

இந்த ஆண்டு ‘கொரோனா’ எனும் கொடிய நோய், மக்களின் மகிழ்ச்சிக்குரிய பண்டிகைகள் அனைத்தையும் காவு வாங்கியதைபோல, ஆடிப்பெருக்கு உற்சாகத்தையும் களை இழக்க செய்து விட்டது. நேற்று ஆடிப்பெருக்கு விழாவை பெரும்பாலான இடங்களில் மக்கள் வீடுகளிலேயே தண்ணீர் குழாயை அலங்கரித்து கொண்டாடினார்கள்.

ஆனால் மயிலாடுதுறையில் உள்ள காவிரி துலா கட்டத்தில் பெண்கள் கொரோனா அச்சுறுத்தலையும் மறந்து ஆடிப்பெருக்கை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளிலேயே ஆடிப்பெருக்கை கொண்டாட அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் மயிலாடுதுறையில் தடையை மீறி பெண்கள் காவிரி கரையில் ஒன்று கூடி வழிபாடு நடத்தினார்கள். அப்போது புதுமண தம்பதிகள் கருகுமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பழவகைகளை வைத்து காவிரி அன்னையை வேண்டி கொண்டனர். இளம் பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர். கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பெண்கள் காவிரி கரையில் கூடியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story