முழு ஊரடங்கு: கடைகள், வணிக நிறுவனங்கள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின


முழு ஊரடங்கு: கடைகள், வணிக நிறுவனங்கள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 3 Aug 2020 3:30 AM IST (Updated: 3 Aug 2020 7:31 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் முழு ஊரடங்கையொட்டி கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டது. சாலைகள் வெறிச்சோடின.

கோவை,

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று முழு ஊரடங்கு என்பதால் கோவை மாவட்டத்தில் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. அத்துடன் பெட்ரோல் விற்பனை நிலையங்கள், டாஸ்மாக் மதுக்கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட கடைகளும் மூடப்பட்டு இருந்தன.

கோவையில் உள்ள டவுன்ஹால், ராஜவீதி, ஒப்பணக்காரவீதி, பெரியகடைவீதி, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, 100 அடிரோடு உள்பட பல்வேறு இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் உக்கடம், டவுன்ஹால், மேட்டுப்பாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் இருக்கும் தினசரி காய்கறி மார்க்கெட்டுகளும் நேற்று திறக்கப்படவில்லை.

அத்துடன் கோவையில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் இரும்பு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு இருந்தன. போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டதால் அவினாசி சாலை, திருச்சி சாலை, 100 அடி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்பட அனைத்து சாலைகளும் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

மாநகர பகுதியில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அதில் காரணம் இல்லாமல் வெளியே சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். சிலருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

பொதுமக்கள் வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கினர். அம்மா உணவகங்கள் மற்றும் மருந்து கடைகள், மருத்துவமனைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தது. அதேபோல் ஆம்புலன்ஸ் சேவை, பால் விற்பனை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தங்கு தடையின்றி செயல்பட்டது.

மேலும் கொரோனா தொற்று அதிகம் பாதிப்பு உள்ள பகுதிகளில் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளச்சிங் பவுடர் தூவப்பட்டது. அனுமதியின்றி வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களில் பொதுமக்கள் வருவதை தடுக்க மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

மேட்டுப்பாளையம் பஸ்நிலைய வணிக வளாகம், ஊட்டி சாலை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. காய்கறி மண்டிகள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது. அத்துடன் வாகன போக்குவரத்து இல்லாததால் சாலைகளும் வெறிச்சோடின.

நீலகிரி மாவட்டத்தின் நுழைவுவாயிலாக விளங்கும் ஓடந்துறை சோதனை சாவடியில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நீலகிரியில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினார்கள்.

Next Story