திருப்பத்தூரில், ரூ.110 கோடியில் கலெக்டர் அலுவலகம் கட்ட 10 ஏக்கர் நிலம் தேர்வு - சென்னை பொறியாளர் நேரில் ஆய்வு
திருப்பத்தூரில் ரூ.110 கோடியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்ட 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த நிலத்தை சென்னை பொறியாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்,
வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. திருப்பத்தூர் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்ட தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி புதிய கட்டிடம் கட்ட பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை இணைந்து இடம் தேர்வு செய்து, அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்காகக் கட்டுமான பிரிவு முதன்மைத் தலைமை பொறியாளர் ராஜா மோகன் தலைமை பொறியாளர் குழுவினர் திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது புதிதாக திருப்பத்தூர் டவுன் லண்டன் மிஷன் ரோடு பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் ரூ.110 கோடியில் 8 மாடியில் கலெக்டர் அலுவலகம் கட்ட தமிழக அரசின் வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதையொட்டி சென்னை பொதுப்பணித்துறை முதன்மைக் கட்டிட கண்காணிப்புப் பொறியாளர் ஆயிரத்து அரசு ராஜசேகரன் வேலூர் கட்டிட கட்டுமான மற்றும் பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளராக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் திருப்பத்தூர் லண்டன் மிஷன் ரோட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டப்படும் இடத்தை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வனத்துறைக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் ரூ.110 கோடியில் கட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். வனத்துறைக்குச் சொந்தமான இந்த இடத்தை நேரில் வந்து பார்வையிட்டு உள்ளோம். இந்த இடத்தில் 3 லட்சம் சதுர அடியில் 8 மாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது.
இந்தக் கட்டிடத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக அறை, வீடியோ கான்பரன்ஸ் அறை, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் உள்பட அனைத்துத் துறை அலுவலகங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கு தமிழக அரசு டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் சிவன் அருளுடன் கலெக்டர் அலுவலகத்துடன் கட்டப்படும் கட்டிடங்கள் குறித்து ஆலோசனை நடந்தது. அப்போது செயற்பொறியாளர் சங்கரலிங்கம், உதவி பொறியாளர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story