முழு ஊரடங்கு கடைப்பிடிப்பு,சாலைகள் வெறிச்சோடின
மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின.
புதுக்கோட்டை,
கொரோனா எனும் கொடிய வைரசின் தாக்கம் என்று தான் ஒழியுமோ? இயல்பு வாழ்க்கை எப்போது தான் திரும்புமோ? என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் வருகிற 31-ந் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த மாதத்தை போல் இந்த மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு மீண்டும் கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி புதுக்கோட்டையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடந்தனர். கீழ ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி உள்பட கடைவீதிகளிலும், புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகிலும் மற்றும் நகர் முழுவதும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. பொது போக்குவரத்து எதுவும் இல்லாததால் வாகனங்கள் எதுவும் ஓடவில்லை.
புதுக்கோட்டை நகர் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. போலீசார் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்தவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர். ஆடிப்பெருக்கையொட்டி ஒரு சில பூக்கடைகள் மட்டும் திறந்திருந்தன. அதில் சிலர் பூக்களை வாங்கி சென்றனர்.
இதேபோல் ஆவுடையார்கோவிலில் மருந்து கடைகள், பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கடைவீதியில் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் மாவட்ட பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு, முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
அரிமளம் ஒன்றியத்தில் அரிமளம், கே.புதுப்பட்டி, ஏம்பல், கீழாநிலைக்கோட்டை, ராயவரம், நமணசமுத்திரம், கல்லூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு, வெறிச்சோடி காணப்பட்டன. ஆடிப்பெருக்கையொட்டி அவரவர் வீட்டில் குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தினர். சில இடங்களில் மருந்து கடை மற்றும் பால் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
Related Tags :
Next Story