மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி: வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின - பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்
நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி நேற்று வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி இருந்தன. பொதுமக்களும் வீடுகளிலேயே முடங்கினர்.
நாமக்கல்,
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு இந்த மாதமும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவமனைகள், மருந்து கடைகள் மீதமுள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன.
இதேபோல் லாரி, கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படாததால் நகர் முழுவதும் அமைதி நிலவியது. லாரிகளை பொறுத்த வரையில் ஆங்காங்கே பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. முழு ஊரடங்கையொட்டி நேற்று உழவர் சந்தைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன.
மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியதால், சாலைகள் வெறிச்சோடி இருந்தன. நாமக்கல் நகரை பொறுத்த வரையில் கடைவீதி, மெயின்ரோடு, திருச்சி சாலை, சேலம் சாலை, திருச்செங்கோடு சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஆங்காங்கே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது தேவையின்றி வெளியே சுற்றி திரிந்த நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இறைச்சி கடைகள் மூடப்பட்டு இருந்தாலும், அதிகாலை 4 முதல் காலை 6 மணி வரை பெரும்பாலான இறைச்சி கடைகள் திறந்து இருந்தன. அவற்றில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. இதேபோல் திருச்செங்கோடு, பரமத்திவேலூர் என மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் முழு ஊரடங்கையொட்டி சாலைகள் வெறிச்சோடி இருந்தன.
ராசிபுரத்தில் முழு ஊரடங்கையொட்டி அனைத்து கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டிருந்தன. மருந்து கடைகள், ஆவின்பால் விற்பனை நிலையம் மற்றும் அம்மா உணவகம் செயல்பட்டது. இதில் குறைந்த அளவில் பொதுமக்கள் வந்திருந்து சாப்பிட்டனர். முக்கிய வீதிகள், தெருக்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முழு ஊரடங்கு காரணமாக அனைத்து தெருக்கள், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. முழு ஊரங்கு காரணமாக ஆடி 18 பண்டிகைக்கு கோவில்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ராசிபுரம், புதுப்பட்டி, கூனவேலம்பட்டி, மூணுசாவடி, சீராப்பள்ளி, மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் உள்பட கிராமங்களில் உள்ள கோவில்கள் திறக்கப்படவில்லை. உள்ளூர் பக்தர்கள் வந்திருந்து கோவிலுக்கு வெளியே நின்று சாமியை தரிசித்து விட்டு சென்றனர்.
ஆனால் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி பகுதியில் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் அதிகளவில் சென்றதை காணமுடிந்தது. தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பொதுமக்கள் முககவசம் அணியாமல் சென்றதையும் காணமுடிந்தது.
Related Tags :
Next Story