சேலத்தை முடக்கி போட்ட முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு-சாலைகள் வெறிச்சோடின


சேலத்தை முடக்கி போட்ட முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு-சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 3 Aug 2020 4:15 AM IST (Updated: 3 Aug 2020 9:46 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நேற்று தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகள் வெறிச்சோடின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையை முழு ஊரடங்கு முடக்கி போட்டு விட்டது.

சேலம்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது இந்த உத்தரவு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஊரடங்கின் போது, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதே போல இந்த மாதமும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.

அதன்படி இந்த மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சேலம் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் மற்றும் 20 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அடைக்கப்பட்டன.

பொதுமக்கள் வெளியே வராமல் தங்களது வீடுகளிலேயே முடங்கினர். சேலம் மாநகரில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, தாதகாப்பட்டி மற்றும் புறநகரில் ஆத்தூர், மேட்டூர், எடப்பாடி, ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஜலகண்டாபுரம் ஆகிய 11 உழவர் சந்தைகளும் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட்டுகளும் நேற்று திறக்கப்படவில்லை.

மேலும் சேலத்தில் வர்த்தக கேந்திரமாக செயல்படும் செவ்வாய்பேட்டை, லீபஜார், பால் மார்க்கெட், கடைவீதி, அன்னதானபட்டி, பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, சொர்ணபுரி, அழகாபுரம் உள்பட பல்வேறு இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின.

சேலத்தில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் புதிதாக கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலம் உள்பட அனைத்து மேம்பாலங்களும், சாலைகளிலும் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. அதேசமயம் அத்தியாவசிய காரணங்களுக்காக இல்லாமலும், உரிய அடையாள அட்டை இல்லாமலும் சென்ற வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அரசு உத்தரவை மீறி கடைகள், மீன் மற்றும் இறைச்சி கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டு உள்ளதா? என அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பிரதான சாலைகள் தவிர பிற இடங்களில் சாலையின் குறுக்கே போலீசார் தடுப்புகள் வைத்து தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.

மாவட்டத்தில் கிராமப்புறங்களிலும் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வீடுகளிலேயே இருந்தனர். கூலித் தொழிலாளர்களும், விவசாயிகளும் வேலைக்கு செல்லவில்லை.

சேலம் மாவட்டத்தில் அம்மா உணவகங்கள் மற்றும் மருந்து கடைகள், மருத்துவமனைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. அதேபோல் ஆம்புலன்ஸ் சேவை, பால் விற்பனை உள்ளிட்ட சேவைகள் தங்கு தடையின்றி செயல்பட்டது.

சேலம், ஓமலூர், எடப்பாடி, தாரமங்கலம், மேட்டூர், கொளத்தூர், ஆத்தூர், வாழப்பாடி, சங்ககிரி, ஏற்காடு, மேச்சேரி, கெங்கவல்லி உள்பட மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த முழு ஊரடங்கு காரணமாக மாவட்டம் முழுவதும் அமைதி நிலவியது. மக்களின் இயல்பு வாழ்க்கையை இந்த முழு ஊரடங்கு முடக்கி போட்டு விட்டது என்றே குறிப்பிடும் அளவில், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு வீதிகள், சாலைகள் வெறிச்சோடி காட்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story