முழு ஊரடங்கு: திருப்பூரில் வெறிச்சோடிய சாலைகள்; கடைகள் அடைப்பு
திருப்பூரில் முழு ஊரடங்கையொட்டி வாகன போக்குவரத்து இன்றி முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
திருப்பூர்,
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்திலும் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது 7-வது கட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கிலும் கடந்த ஊரடங்கு போலவே ஆகஸ்டு மாதத்தில் வருகிற அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த மாதத்தில் முதல் முழு ஊரடங்கான நேற்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
பேக்கரி, காய்கறி, மளிகை, டீக்கடைகள் உள்பட அனைத்து விதமான கடைகளும் மூடப்பட்டிருந்தன. மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மருந்து கடைகள் மட்டுமே திறந்திருந்தன. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் தென்னம்பாளையம் காய்கறி மற்றும் மீன்சந்தை, பழைய பஸ் நிலையத்தில் உள்ள சந்தை போன்றவற்றில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். முழு ஊரடங்கின் காரணமாக இந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
போக்குவரத்து இன்றி மாநகர் பகுதிகளில் அவினாசி ரோடு, மங்கலம் ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, பி.என். ரோடு ஆகிய முக்கிய சாலைகள் மற்றும் பழைய பஸ் நிலைய பாலம் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. இது தவிர முக்கியமான சாலைகள் மற்றும் சில பகுதிகளிலும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டிருந்தன. இதுபோல் புஷ்பா சந்திப்பு, எஸ்.ஏ.பி. சந்திப்பு, பழைய பஸ் நிலைய பாலம், மாநகராட்சி சிக்னல் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களில் வருகிறவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். உரிய காரணமின்றி வெளியே வந்த வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பினர். சிலருக்கு அபராதமும் விதித்தனர். ஆடை விற்பனைக்கு பெயர் பெற்ற காதர்பேட்டையிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.
இதுபோல் மாவட்டத்தில் தாராபுரம், பல்லடம், உடுமலை, காங்கேயம், அனுப்பர்பாளையம், வீரபாண்டி, பொங்கலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் முழு ஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
முழு ஊரடங்கையொட்டி குன்னத்தூர் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. குன்னத்தூர் பஸ் நிலையம் நால் ரோடு சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. போலீசார் ஆங்காங்கே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story