நாளுக்கு நாள் வேகமெடுக்கும் தொற்று: நாகர்கோவிலில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது - தடுப்பு பணிகள் தீவிரம்


நாளுக்கு நாள் வேகமெடுக்கும் தொற்று: நாகர்கோவிலில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது - தடுப்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 3 Aug 2020 11:15 AM IST (Updated: 3 Aug 2020 12:01 PM IST)
t-max-icont-min-icon

நாளுக்கு நாள் வேகமெடுக்கும் தொற்றால் நாகர்கோவிலில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. எனவே நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் முதலில் 5 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து நோய்த்தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. அதோடு வெளியூர்களில் இருந்து குமரி மாவட்டம் வர கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இதனால் நோய் பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. ஆனால் நாளடைவில் சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்காமல் சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் அதிகம் கூடியதாலும், முக கவசம் அணியாமல் வெளியே சுற்றித்திரிந்ததாலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. மேலும் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களாலும் தொற்று பாதிப்பு உயர்ந்தது.

இந்த நிலையில் தற்போது நாள் ஒன்றுக்கு 150 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதோடு இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

நாகர்கோவில் மாநகராட்சியை பொறுத்த வரையில் முதலில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடங்களை சுகாதாரத்துறையினர் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்து நோய்த்தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர்.

அதன் பிறகு வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்களுக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு வந்தது. அவ்வாறு வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் குமரி மாவட்டத்துக்குள் நுழைய விடாமல் மாவட்ட எல்லையிலேயே தங்க வைக்கப்பட்டனர். இதனால் நோய் பரவல் தடுக்கப்பட்டது. நாகர்கோவிலில் ஆங்காங்கே சில இடங்களில் மட்டுமே தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து வடசேரி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக காய்கறி சந்தையை கொரோனா பதம் பார்த்தது.

அங்கு முதலில் ஒரு வியாபாரிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு நடத்திய மருத்துவ பரிசோதனையில் அடுத்தடுத்து வியாபாரிகளும், காய்கறிகள் வாங்க சந்தைக்கு வந்து சென்றவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வடசேரி காய்கறி சந்தை மூடப்பட்டது. கோயம்பேடு சந்தை மூலமாக சென்னையில் தொற்று அதிகரித்ததை போன்று வடசேரி தற்காலிக சந்தை நாகர்கோவிலில் கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது என்றே கூறலாம்.

அதன்பிறகு நாகர்கோவிலில் பிரபலமான கோட்டார் மார்க்கெட்டையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அடுத்தடுத்து வியாபாரிகள், அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் என ஏராளமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதேபோல ஒழுகினசேரி மார்க்கெட்டிலும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. நாகர்கோவிலில் தற்போது அருந்ததியர் காலனி, மரச்சீனிவிளை உள்ளிட்ட பகுதிகளில் நோய்த்தொற்று சற்று அதிகமாக காணப்படுகிறது.

நாகர்கோவிலில் மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். முதலில் கோட்டார் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் ஒருவர் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு சப்-இன்ஸ்பெக்டர், பெண் போலீஸ் என 5 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் கோட்டார் போலீஸ் நிலையம் மூடப்பட்டது. அதன்பிறகு நோய் பரவல் குறைந்ததால் கோட்டார் போலீஸ் நிலையம் திறக்கப்பட்டது.

இதே போல வடசேரி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு மற்றும் 4 ஊர்காவல் படை வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மேலும் 3 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து வடசேரி போலீஸ் நிலையம் மீண்டும் மூடப்பட்டுள்ளது. அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 8 போலீசார் வரை பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதுபோன்று கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நகைக்கடை மற்றும் மீனாட்சிபுரத்தில் 3 நகைக்கடைகளில் ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் சம்பந்தப்பட்ட நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு நிலவரப்படி நாகர்கோவில் மாநகராட்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஆக உயர்ந்து உள்ளது. நேற்றும் நாகர்கோவிலில் பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் நாகர்கோவில் மாநகராட்சியில் மட்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது. குமரி மாவட்டத்தில் பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டிய நிலையில், நாகர்கோவிலில் மட்டும் தொற்று ஆயிரத்தை கடந்துள்ளது. 5-ல் ஒரு பங்கு தொற்று நாகர்கோவிலில் மட்டும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “நாகர்கோவிலில் நோய் பரவலை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் தினமும் கிருமி நாசினி தெளிப்பது, பிளச்சிங் பவுடர் போடுவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது“ என்றார்.


Next Story