கடலூர் சாலையில் போலீஸ் கெடுபிடியால் வாகன நெரிசல்


கடலூர் சாலையில் போலீஸ் கெடுபிடியால் வாகன நெரிசல்
x
தினத்தந்தி 4 Aug 2020 3:45 AM IST (Updated: 4 Aug 2020 3:45 AM IST)
t-max-icont-min-icon

போலீசாரின் கெடுபிடியால் கடலூர் சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

அரியாங்குப்பம்,

புதுவையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்தும், தொற்று பரவல் குறைந்தபாட்டில்லை. இதை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் நடமாட்டத்தை தடுக்க தற்போது போலீசார் கெடுபிடி காட்டத்தொடங்கியுள்ளனர்.

அதாவது கடலூர், விழுப்புரம், திண்டிவனம், கிழக்குகடற்கரை ஆகிய சாலைகளில் செல்லும் வாகனங்களை வழிமறித்து உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என்று கேட்கின்றனர். ஆவணங்கள் சரியாக இருந்தாலும் முககவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது என ஏதாவது ஒரு காரணத்தை கூறி அபராதம் விதிக்கின்றனர்.

இதேபோல் நேற்று மாலை அரியாங்குப்பம் போலீசார் நோணாங்குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து, உரிய ஆவணங்கள் உள்ளதா? என்று விசாரித்தனர். ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அப்போது புதுவை பதிவுஎண் கொண்ட வாகனம் ஒன்று வந்தது. அதனை வழிமறித்த போலீசார், டிரைவர் முககவசம் அணியவில்லை என்று அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. இதனால் டிரைவருக்கும், போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக புதுச்சேரி - கடலூர் சாலையின் இருமார்க்கமும் சுமார் அரை கிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதனால் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனர். சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு வாகன நெரிசல் சீரானது. போலீசாரின் கெடுபிடியால் வாகன ஓட்டிகள், நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே அபராதம் விதிப்பதை முறைப்படுத்தவேண்டும் என்று அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story