திருவாரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு - கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர் தனது கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் சார்வன் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி மைதிலி. இவர் தனது குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவரை அருகில் இருந்த அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மைதிலி கலெக்டர் அலுவலகத்தில் அளிக்க இருந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான்(மைதிலி) கொரடாச்சேரி ஒன்றியம் சார்வான் கிராமத்தில் எனது கணவர் செந்தில்குமாருடன் வசித்து வருகிறேன். டிரைவரான எனது கணவர் ஊர் மக்களிடம் அடிக்கடி தகராறு செய்வதாக கூறி எங்கள் குடும்பத்தை ஊரை விட்டே ஒதுக்கி வைத்துள்ளனர்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிலர் எங்கள் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி எனது கணவரையும் தாக்கினர். இதில் காயமடைந்த எனது கணவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே எனது கணவர் செந்தில்குமாரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story