திருச்சியில், காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்ற சிறுவன்-சித்தப்பா மாயம் - தண்ணீரில் மூழ்கினரா? தேடும் பணி தீவிரம்


திருச்சியில், காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்ற சிறுவன்-சித்தப்பா மாயம் - தண்ணீரில் மூழ்கினரா? தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 4 Aug 2020 4:00 AM IST (Updated: 4 Aug 2020 6:51 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்ற சிறுவனும், சித்தப்பாவும் மாயமானார்கள். அவர்கள் தண்ணீரில் மூழ்கினரா? என்பது குறித்து தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜீயபுரம், 

திருச்சி முத்தரசநல்லூர் முருங்கபேட்டை பகுதியை சேர்ந்தவர் நடேசன். இவர் அந்த பகுதியில் உள்ள தியான மையத்தில் தோட்ட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஸ்டான்லி (வயது 37), டேவிட் (35) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் ஸ்டான்லி திருச்சி விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் மின்ஊழியராக பணியாற்றி வந்தார். டேவிட் காரைக்கால் கப்பல் துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். ஸ்டான்லி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் வசித்து வருகிறார். இவரது மனைவி மேனகா. இவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஜோயல் (9) என்ற மகன் உள்ளார்். நடேசனின் 2 மகன்களும் ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் தந்தை நடேசன் வேலை பார்க்கும் தியான நிலையத்தில் கடந்த மார்்ச் மாதம் முதல் தங்கியிருந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் ஜோயல், தனது சித்தப்பாவான டேவிட்டுடன் தியான நிலையம் அருகே உள்ள காவிரி ஆற்றில் குளிக்க செல்வதாக சென்றனர். ஆனால் அவர்கள் நீண்ட நேரம் ஆகியும் திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நடேசன் அவர்களை தேடி காவிரிஆற்றுக்கு வந்தார். அப்போது, காவிரி கரையில் அவர்கள் கொண்டுவந்த துண்டு, சோப்பு டப்பா கரையில் இருந்தது. ஆனால் இருவரையும் காணவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் அப்பகுதி மக்களின் உதவியுடன் மகனையும், பேரனையும் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. இது குறித்து திருச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து நீண்டநேரம் தேடினர். அதன்பின்னும் அவர்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையில் இரவு நேரமானதால், தேடமுடியவில்லை. மேலும் அவர்களது கதி என்ன என்றே தெரியவில்லை. இன்று மீண்டும் தேடுவதாக தீயணைப்பு வீரர்கள் கூறி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சித்தப்பாவும், சிறுவனும் காவிரி ஆற்றுக்குள் காணாமல் போனதால், அவர்களது உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். மாயமான ஜோயல் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

Next Story