மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் விரைவில் ஆய்வு செய்ய உள்ளார் - அமைச்சர் தங்கமணி பேட்டி
நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் ஆய்வு செய்ய இருப்பதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தி்ல் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களுடன் கலந்துரையாடினர்.
பின்னர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-4 தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 12 இளநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி ஆணைகளையும், பிள்ளாநல்லூர் கிராமத்தில் கடந்த மே மாதம் 15-ந் தேதி சூறைகாற்றுடன் பெய்த மழையின் போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இறந்த மல்லிகா என்பவரின் குடும்பத்திற்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சத்திற்கான ஆணையினை அமைச்சர்கள் வழங்கினர்.
பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
கொரோனாவில் இருந்து குணமாகி, 40 நாட்களுக்கு பிறகு தற்போது முதல் கூட்டமாக இங்கு நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டேன். எனது அனுபவமாக சொல்கிறேன். அறிகுறி தென்பட்டவர்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் இறந்து விட்டதாக கேள்விப்பட்டேன். இவர்கள் வயது முதிர்ச்சி மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர். குறிப்பாக காலதாமதமாக ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்து உள்ளனர். எனவே அறிகுறி தெரிந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அப்போது தான் நோயை எளிதில் குணப்படுத்த முடியும். பொதுமக்கள் அரசின் அறிவுரைகளை பின்பற்றி தொற்றில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் கொரோனா தொற்று சிகிச்சையில் உள்ளவர்களுக்கும், தனிமைப்படுத்தபட்ட நபர்களுக்கும் தரமான மருத்துவம், உணவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விரைவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். ஊரடங்கு காலத்தில் முறையான காரணங்கள் இருந்தால் மட்டுமே வெளி மாவட்டங்களுக்கு செல்வோருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. மிக முக்கிய நிகழ்வுகளுக்காக இ-பாஸ் கிடைக்காவிட்டால் மாவட்ட கலெக்டரை அணுகலாம்.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீட்டில் இருந்ததால் தான் மின்பயன்பாடு அதிகரித்து மின் கட்டணமும் அதிகரித்து உள்ளது. மாதம் தோறும் மின் கட்டணம் கணக்கீடு செய்ய வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
தொற்று பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி வழங்கப்பட்டு வருகிறது. ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்ற டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் சாரதா, துணைதலைவர் பி.ஆர்.சுந்தரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பாலமுருகன், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, துணை இயக்குனர் (சுகாதாரம்) சோமசுந்தரம், இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) சித்ரா உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியாக அமைச்சர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story