கூடலூர் பகுதியில் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கூடலூர் பகுதியில் தொடர் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தது. இதைத்தொடர்ந்து மின்சார வினியோகமும், செல்போன் அலைவரிசை சேவையும் அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கடுங்குளிர் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
நேற்றைய கால நிலவரப்படி நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் 145 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மற்ற பகுதிகளில் மழை பதிவு (மி.மீட்டரில்) விவரம் வருமாறு:- அவலாஞ்சியில் 103-ம், கூடலூரில்-88-ம், மேல்கூடலூர், பந்தலூரில்-78-ம், அப்பர் பவானியில்-73-ம், நடுவட்டத்தில்-39-ம், கிளன்மார்கனில் 33-ம், பாடந்தொரையில் 30-ம், சேரங்கோட்டில் 27-ம், எமரால்டில் 26-ம், குந்தாவில் 19-ம், கோடநாடில் 16-ம், பாலகொலா, செருமுள்ளியில் 15-ம், ஓவேலி, கோத்தகிரி, ஊட்டியில் 13-ம், ஹெலிச்சாலில் 10-ம், கேத்தி, கிண்ணக்கொரை, குன்னூரில் 9-ம், கல்லட்டி,ஹெத்தையில் 7-ம், கீழ்கோத்தகிரியில் 6-ம், எடப்பள்ளி, பர்லியாறு, மசினகுடியில் 4-ம், மழை பதிவாகி உள்ளது.
கூடலூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாண்டியாறு, மாயார், பொன்னானி, சோலாடி, ஓவேலி ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேவாலா பகுதியில் மழை அதிகமாக பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பலத்த மழையால் வாழமூலா பகுதியில் பாலம் உடைந்தது. இதனால் மரக்கட்டைகளில் பாலம் அமைத்து அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது புதிய பாலம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தொடர் கனமழையால் மரப்பாலத்தை தொடும் அளவுக்கு வெள்ளம் பாய்ந்து செல்கிறது. இதனால் பொதுமக்கள் ஆற்றை கடக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதேபோல் கொட்டும் மழையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறிக்க முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர். கூடலூர் பகுதியில் பாடந்தொரை, மங்குழி, புத்தூர்வயல் உள்பட பல இடங்களில் விவசாய நிலத்துக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பயிர்கள் சேதம் அடையும் நிலையில் உள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கூடலூர் பகுதியில் வழக்கமாக ஜூன் மாதம் பருவமழை பெய்ய தொடங்கும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக மழை தாமதமாக பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் தடுப்பணைகள், கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேலும் காபி, குறுமிளகு, இஞ்சி, ஏலக்காய் உள்ளிட்ட பணப்பயரிகளுக்கு ஏற்ற மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை நீடித்தால் மட்டுமே விளைச்சல் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். கூடலூர் பகுதியில் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பந்தலூர் பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது.
Related Tags :
Next Story