சமூக வலைதளத்தில் வைரலாக பரவுகிறது: பூதப்பாண்டி திட்டுவிளையில் - வாலிபருக்கு முட்டை அபிஷேகம் செய்து பிறந்தநாள் கொண்டாடிய நண்பர்கள்
பூதப்பாண்டி திட்டுவிளையில் வாலிபரை மரத்தில் கட்டி போட்டு பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில்,
தற்போதைய நவீன காலத்தில் நண்பர்களின் பிறந்த நாள் விழாவை வித்தியாசமான முறையில் கொண்டாடுவது இளைஞர்கள் மத்தியில் மோகமாக உள்ளது. பிறந்த நாள் கொண்டாடும் நண்பரின் மீது சாணியை கரைத்து ஊற்றுவது, தக்காளி மற்றும் முட்டை வீசுவது உள்ளிட்டவை வாடிக்கையாகி வருகிறது.
இந்தநிலையில் குமரி மாவட்டம் திட்டுவிளையில் வாலிபரின் பிறந்த நாளை நண்பர்கள் புதுவிதமாக கொண்டாடி இருக்கிறார்கள். மேலும், அந்த கொண்டாட்டத்தை செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர். அந்த காட்சி வைரலாக பரவி வருகிறது.
அதாவது, முதலில் பிறந்த நாள் கொண்டாடும் நண்பரை கேக் வெட்ட வைத்து பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறார்கள். பின்னர் கேக்கை வாலிபர், நண்பர்களுக்கு ஊட்டி விடுகிறார். நண்பர்களும் அவருக்கு ஊட்டி விடுகிறார்கள். அதன் பிறகு தான் அந்த புதுவித கொண்டாட்டம் தொடங்குகிறது. அதாவது, வாலிபரை மரத்தில் கட்டி வைத்து, அவர் மீது வண்ணப் பொடிகளை நண்பர்கள் தூவுகின்றனர்.
பின்னர் தலை மற்றும் உடலில் பல இடங்களில் முட்டையை உடைத்து அபிஷேகம் செய்கிறார்கள். நண்பர்கள் செய்யும் அந்த அன்பு தொல்லையை பிறந்த நாள் கொண்டாடும் வாலிபர் எந்த தடையும் செய்யாமல் புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிறார். இந்த காட்சி 5 நிமிடங்கள் ஓடுகிறது.
ஏற்கனவே குமரி மாவட்டத்தில் சாணியை கரைத்து பிறந்த நாள் கொண்டாடிய வாலிபர் மீது அவருடைய நண்பர்கள் பூசும் சம்பவம் சமீபத்தில் நடந்திருந்தது. இந்த நிலையில், நண்பர்கள் முட்டை அபிஷேகம் செய்யும் காட்சி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பிறந்த நாளன்று பெரியவர்களிடம் ஆசி பெறுவது, கடவுளை வணங்குவது, ஏழைகளுக்கு உதவுவது போன்ற கலாசாரம் இளைஞர்களிடையே மாறி, தற்போது உற்சாகமிகுதியில் வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடும் நோக்கில் முட்டை அபிஷேகம் செய்யும் காட்சி முகம் சுளிக்கும் வகையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும், பொது இடத்தில் இவ்வாறு செயல்படும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story