வேலூர் லாங்குபஜார், மண்டித்தெருவில் இருபுறமும் கடைகள் திறப்பு வியாபாரிகள் மகிழ்ச்சி


வேலூர் லாங்குபஜார், மண்டித்தெருவில் இருபுறமும் கடைகள் திறப்பு வியாபாரிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 4 Aug 2020 5:42 PM GMT (Updated: 4 Aug 2020 5:42 PM GMT)

வேலூர் லாங்கு பஜார், மண்டித்தெருவில் இருபுறமும் நேற்று கடைகள் திறக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

வேலூர்,

வேலூர் நகரின் முக்கிய வியாபார மையமான மண்டித்தெரு, லாங்குபஜார், நேதாஜி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கடை வியாபாரிகள், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டன. காய்கறி கடைகள் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டன.

மண்டித்தெரு, லாங்குபஜார், காந்திரோடு, மெயின்பஜார், சுண்ணாம்புகாரத்தெரு உள்பட 12 பகுதிகளில் உள்ள கடைகளை சுழற்சி முறையில் திறக்க கலெக்டர் அனுமதி அளித்தார். அதாவது; ஒருநாளைக்கு ஒருபுறத்தில் உள்ள கடைகளும், மறுநாள் மற்றொரு புறத்தில் உள்ள கடைகளும் திறக்கப்பட்டு வந்தன. இந்த மாதம் (ஆகஸ்டு) ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதன்படி வேலூர் மண்டித்தெரு, லாங்குபஜார், மெயின்பஜார் உள்பட 12 பகுதிகளில் சுழற்சி முறையில் ஒருபுறம் மட்டும் திறக்கப்பட்டு வந்த கடைகள் நேற்று இருபுறமும் திறக்கப்பட்டன. இதனால் அங்குள்ள கடைகளில் பொருட்கள் வாங்க வழக்கத்தை விட ஓரளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு தினமும் கடைகள் திறக்க அனுமதி கிடைத்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கலெக்டர் அனுமதி

இதுகுறித்து வணிகர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், மளிகை, பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு வியாபாரிகள் தினமும் கடைகளை திறக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை கலெக்டரிடம் தெரிவித்தோம். அதன்பேரில் கலெக்டர் நடவடிக்கை எடுத்து நேற்று முதல் அனைத்துக் கடைகளையும் குறிப்பிட்ட நேரத்தில் திறக்க அனுமதி அளித்தார், எனத் தெரிவித்தனர்.

Next Story